அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து!
நேற்று(ஜூன்23) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்து நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
பார்படாஸ் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று(ஜூன்23) நடைபெற்ற சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணியும் அமெரிக்க அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த அமெரிக்க அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. ரன் எடுக்க திணறிய அமெரிக்கா அணி 18.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் சேர்த்தது. அமெரிக்கா அணியில் அதிகபட்சமாக நித்திஸ் குமார் 30 ரன்கள் சேர்த்தார். கோரி ஆண்டர்சன் 29 ரன்களும், ஹர்மீட் சிங் 21 ரன்களும் சேர்த்தனர்.
இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாம் கரண், அடில் ரசித் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 116 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் அவர்களின் அதிரடி ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி 9.4 ஓவர்களில் இலக்கை அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தார். மேலும் பில் சால்ட் 25 ரன்கள் சேர்த்தார். இதனால் இங்கிலாந்து அணி சூப்பர்8 சுற்றின் குரூப் பி பிரிவில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் அமெரிக்கா அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து மூன்று தோல்விகளை பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.