கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீடு! தமிழக அரசு கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழகத்தில் புதிய 100 ரூபாய் நாணயம் வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தற்பொழுது அரசாணை வெளியிட்டுள்ளது.
திமுக கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா நாடு தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு தமிழக அரசு சார்பாக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதன் ஒரு பகுதியாக நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு திட்மிட்டிருந்தது. இதையடுத்து நினைவு நாணயம் தொடர்பான கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அளித்தது. தமிழக அரசு அளித்த கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்து வந்த ஒன்றிய நிதி அமைச்சகம் தமிழக அரசின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது நூறு ரூபாய் நாணயம் வடிவில் கலைஞர் கருணாநிதி அவர்களின் முகத்துடன் 100 ரூபாய் நாணயம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து இதை அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசிதழில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு நாணயத்தின் ஒரு புறம் கலைஞர் அவர்களின் புகைப்படம் உள்ளது. சிரித்த முகத்துடன் இருக்கும் கலைஞர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் இந்த நாணயத்தில் இருக்கின்றது. மேலும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அச்சிடப்பட்டுள்ளது. கீழே 1924-2024 என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் மறுபுறம் தேசிய சின்னமான அசோகச் சின்னத்துடன் 100 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்தியா என்று ஆங்கில மொழியிலும் பாரத் என்று ஹிந்தியிலும் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நாணயத்தில் தேவைப்படும் மாற்றங்களை ஒன்றிய அரசே செய்து விரைவில் கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.