நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு எங்கு எப்பொழுது நடைபெறும் என்பது குறித்தான தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது.
திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய் எப்பொழுது அரசியலில் இறங்குவார் என்று தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்றும் நடிகர் விஜய் அவர்கள் அறிக்கை விட்டிருந்தார்.
ஒரு பக்கம் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த இந்த அறிக்கை மறுபக்கம் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது இனிமேல் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் திரைப்படங்களில் நடிப்பதை விடப்போவதாகவும் கூறியது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.
இருப்பினும் கட்சி தொடங்குவதற்கு முன்னர் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதாக வாக்கு கொடுத்த நிலையில் அதை முடித்து விட்டு பின்னர் தான் முழுநேர அரசியல் பணிகளில் இறங்கப் போவதாக நடிகர் விஜய் அவர்கள் கூறினார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அதிரடியான அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக கடந்த ஜூலை மற்றும் ஜூன் மாதம் இவர் நடத்திய மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. அதுவே மாநாடு போல நடந்த நிலையில் கட்சி என்றால் மாநாடு நடத்த வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொள்ள கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் மாநாடு நடத்த தேவையான அதாவது 10 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்பொழுது ஒரு வழியாக அலைந்து திரிந்து மாநாட்டுக்காக திருச்சியில் ஒரு இடத்தை தமிழக வெற்றிக் கழகம் பிடித்துள்ளது.
அதாவது திருச்சியில் பொன்மலை பகுதியில் உள்ள ஜி கார்னர் திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அது மட்டுமில்லாமல் முதல் மாநாடு செப்டம்பர் 25ம் தேதி நடைபெறவுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த மாநாட்டில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்று 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.