GANESH CHATURTHI 2024: தமிழ்நாடு காவல் துறையானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைப்பதற்கு சில கட்டுபாடுகளையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தியானது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடப் படுவது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு சிலை வைப்பதற்கான விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் குறித்த சுற்றறிக்கையினை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.
வைக்கப்படும் விநாயகர் சிலைகள், ரசாயனக் கலவை அற்றதாக இருக்க வேண்டும், மேடையுடன் சேர்த்து விநாயகர் சிலையானது பத்து அடிக்கும் அதிகமாக இருத்தல் கூடாது போன்ற பல்வேறு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையின் தலைவர் டிஜிபி ஜிவால் அவர்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி விநாயகர் சிலை வைக்க இருப்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் துணை கலெக்டர் ,காவல் உதவி கமிஷனர் அல்லது ஆர்டிஓ போன்றவர்களிடமிருந்து முன் அனுமதி பெற்ற பின்பே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்.
கடிதம் வாயிலாக மின்சாரம் பெறுவதற்கான விபரத்தை தெரிவிக்க வேண்டும். காவல் ஆய்வாளரிடம் அனுமதி பெற்ற பின்புதான் ஒலிப்பெருக்கி வைக்க வேண்டும். விநாயகர் சிலைகளை கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கோஷங்களை எழுப்பி பிற மதத்தவர்களை புண்படுத்தக் கூடாது. தடையில்லா சான்றிதழ் பெற்ற பின்பே தனிநபருக்கு சொந்தமான இடங்களில் சிலை வைக்க வேண்டும். மாட்டு வண்டி மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்லக் கூடாது.
பட்டாசுகளை ஊர்வலம் செல்லும் பாதைகளில் வெடிக்கக் கூடாது. உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் சிலைகள் வைக்கலாம். போன்ற சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்ட சுற்றறிக்கையின்படி வருகின்ற முப்பதாம் தேதிக்குள் பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.