உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பிலிப்பைன்ஸில் உள்ள பள்ளிகள் திறக்கப்படாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுபடுத்த அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்நிலையில் தற்போதைக்கு சமூக விலகல் தான் இந்த வைரசிடமிருந்து காப்பாற்றி கொள்ள சரியான வழி என்றுணர்ந்து அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தன.
இதனையடுத்து கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை மூடப்பட்டு நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
ஆனால் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதில் பள்ளிகளை மீண்டும் எப்போது திறக்கலாம் என பல நாடுகளில் கல்வியாளர்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் பிலிப்பைன்ஸில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
அந்நாட்டில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இணையவழி கல்வியை வழங்க ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பாலான பகுதிகளுக்கு போதிய இணைய வசதி இல்லாத காரணத்தால் அந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாக உள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இணையவசதி இல்லாத அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
படிக்கும் மாணவர்களின் நலனில் அரசுக்கு அதிக அக்கறை உள்ளதாகவும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தால் கூட தொற்று பரவும் அபாயம் இருப்பதால் தான் மீண்டும் பள்ளிகளை திறப்பதில் உடன்பாடு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வானொலி, தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் எடுப்பதற்கான வேலைகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் குழந்தைகளின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் பிலிப்பைன்ஸ் அரசை அந்நாட்டு மக்கள் பாராட்டி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸில் இதுவரை 23000 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.