வில்லங்க சான்றிதழ் வாங்க வில்லங்கமே வராது! பத்திர பதிவுத்துறையில் புதிய வசதி!

பதிவுத்துறை: பதிவுத்துறை மக்களின் நலன் மற்றும் வங்கிகளின் நலன் கருதி ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் மக்கள் மற்றும் வங்கித்துறை அதிகாரிகள் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

பதிவுத்துறை மக்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எளிதாக பொதுமக்கள் இணையவழி ஆவணங்களை உருவாக்கும் வசதி, உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்பே இணைய வழியாக அனுப்பி சரிபார்க்கும் முறை, மேலும் ஆவணங்களை 10 நிமிடத்தில் பதிவு செய்து வழங்கும் வசதி, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக உடனுக்குடன் ஆவண நிலை பற்றிய தகவல் தெரிவிக்கும் வசதி, இணையவழி கட்டணம் செலுத்தும் முறைகள் என அனைத்தும் செயல்படுத்தபடுகிறது.

அது மட்டும் அல்லாமல் வங்கிகளுக்கும் ஒரு புதிய அம்சத்தை தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் பொதுவாக வீடு கட்ட அல்லது வீடு வாங்க வங்கிகளில் கடன் வாங்குவார்கள். அப்போது அதற்கான ஆவணங்களை வங்கியில் சேர்க்க வேண்டும். கடன் தவணை முடியும் வரை அந்த ஆவணங்கள் வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும். வங்கி கடன் முடிந்த பிறகு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று அசல் ஆவணங்களை ஒப்படைத்து Memorandum of Deposit என்பதை முடிக்க வேண்டும்.

ஆனால் தற்போது வங்கித்துறை அதிகாரிகளும் அலுவலகத்தில் இருந்தபடியே ஆன்லைனில் பத்திரங்களை சரிபார்க்கும் வசதியை பதிவுத்துறை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வங்கி அதிகாரிகள் நேரில் வராமல் இணையதளத்தில், தங்கள் பெயரில் கணக்கு துவங்கி அதில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து, கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தினால் போதும். அந்த விவரங்கள் அனைத்தும் சொத்தின் வில்லங்க சான்றிதழில் பதிவேற்றப்படும் என்ற புதிய அம்சம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து வங்கி அதிகாரிகளுக்கு நேரம் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் வங்கி தங்களது ஆவணப்பதிவு தொடர்பான தேவைகளை விரைவாக பூர்த்தி செய்து கொள்ள பதிவுத்துறை சார்பில் 176 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டதே “ஸ்டார் 2.0” என்ற திட்டமாகும். இந்த இணையத்தின் மூலம் www.tnreginet.gov.in இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.