Chennai: சென்னை உயர்நீதிமன்றம் தீபம் என்ற பெயரில் எண்ணெய் விற்க கூடாது என, பிரபலமான காளீஸ்வரி நிறுவனம் எழுப்பிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான காளீஸ்வரி நிறுவனம் கோல்ட் வின்னர், கார்டியா லைப், ஒரைசா உள்ளிட்ட டிரேட் மார்க்குடன் சமைக்கும் எண்ணெய் வகைகளையும், ஐந்திற்கும் மேற்பட்ட விளக்கேற்றும் எண்ணை வகைகளையும் விற்பனை செய்து வருகிறது. அதில் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் மிகவும் பிரபலமாக இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த செல்வ மாதா ஆயில் நிறுவனம் துர்கா தீபம் விளக்கேற்றும் எண்ணெய் என்ற பெயரில் தங்களுடைய டிரேட் மார்க்குகான தீபம் என்ற பெயரை பயன்படுத்தி சேலம், கோவை, புதுக்கோட்டை, பெங்களூர் போன்ற பகுதிகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த செயல் தவறானது மற்றும் சட்ட விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தீபம் என்ற பெயரில் செல்வ மாதா ஆயில் நிறுவனம் எண்ணெய் விற்க கூடாது என இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த தீபாவளி பண்டிகை காரணமாக எண்ணெய் அதிகமாக விற்கும் போது காளீஸ்வரி நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என அந்நிறுவனத்தின் உரிமையாளர் கூறியிருந்தார். மேலும் உலக அளவில் இந்த எண்ணெயை சந்தைபடுத்தும் நோக்கத்தில் உள்ளோம் என காளீஸ்வரி நிறுவனம் தெரிவித்துள்ளது.