TVK: தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடந்ததை பார்த்து திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, கிண்டலாக இந்த படம் நல்லா ஓடும் என விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் தன்னை காண வந்த தொண்டர்களுக்காக சுமார் 45 நிமிடங்கள் விடாமல் கர்ஜித்தார். அந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளையும் மறைமுகமாக விமர்சித்தார் தவெக தலைவர் விஜய். அந்த வகையில் அவர் தமிழகத்தில் திராவிட மாடல் என்று ஏமாற்றி ஒரு குடும்பத்தினர் கொள்ளையடித்து வருவதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இது தொடர்பாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கிண்டலாக ஒரு ட்வீட் செய்துள்ளார். விஜய் பேச்சு சினிமா பாணியில் இருந்ததாகவும் இந்த படம் கூட 100 நாள் ஓடும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்… GOOD FILM !! 100 நாள் திரையரங்கிளும், ஓடிடியில் கொஞ்சநாளும் ஓடும், “வாழ்த்துகள் விஜய்” என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.
அது மட்டும் அல்லாமல் விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தையும் டேக் (Tag) செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் திமுக ஆதரவாளர்கள் ராஜீவ் காந்தியின் கருத்தை ஆதரித்தும், அதே நேரத்தில் தவெக தொண்டர்கள் கடுமையாக விமர்சித்தும் பதிலளித்து வருகிறார்கள். மேலும் தவெக தலைவர் விஜய் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என கூறி உள்ளார்.