Rasipuram:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வில் இருந்து ராசிபுரத்தில் நேற்று இரவு சென்ற பயணிகள் பேருந்து மெட்டாலா கோரையாறு பாலத்தில் விபத்தில் சிக்கியது.
ஆத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ராசிபுரத்திற்கு சென்ற கார்த்திகேயா பஸ் ராசிபுரம் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கோரையாற்று பாலத்தில் செல்லும் போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்துள்ளது இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பேருந்து மற்றும் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கி கோர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட லாரி மற்றும் பேருந்து டிரைவர் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள். 20வதுக்கு மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் விபத்தில் சிக்கிய பேருந்து மற்றும் லாரியின் பாகங்கள் பிரித்தெடுக்கப்பட்டு அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் ராசிபுரம் டு ஆத்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்தில் சிக்கிய பேருந்து மெட்டாலா கோரையாறு பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து இருந்தால் பெரிய விபத்தாக மாறி இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து இருப்பதால் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேருந்து அதி வேகமாக சென்றதே இந்த கோர விபத்துக்கு காரணமாக இருந்தது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.