கொரோனா அச்சத்தால் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா பக்தர்கள் யாருமின்றி நடைபெற்று வருகிறது.
உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பிரம்மோற்சவம் நடக்கும். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர தினத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர தினத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றால் ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோதும் இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சன விழாவை நடத்த முடிவு செய்து அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன, அதன்படி கடந்த 19 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
விழா நெருங்கும் வேளையில் கொரோனா பரவலை சுட்டிக்காட்டிய மாவட்ட நிர்வாகம், விழாவில் அதிகமானோர் கலந்து கொண்டால் பக்தர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் குறைந்த அளவிலான கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் தீட்சதர்களை கொண்டு விழாவை நடத்துமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில் விழாவை நடத்த தயாரான 150 தீட்சதர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2 தீட்சதர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கோவிலில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ஆய்வுகளை மேற்கொண்டு தீவிர ஆலோசனை நடத்தினர்.