Atav Arjuna: ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணைவதாக இருந்தால் பரிசீலனை செய்யப்படும் என ஜி கே மணி தெரிவித்து இருக்கிறார்.
திமுக கூட்டணியில் இருக்கும் விசிக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவி வகித்தவர் ஆதவ் அர்ஜுனா. சமீப காலமாக திமுக மற்றும் விசிக கட்சிக்கும் இடையிலான கூட்டணி உறவை பாதகம் விளைவிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா செயல்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் திமுகவை நேரடியாக விமர்சனம் செய்து தவெக விஜய்க்கு ஆதரவு கொடுத்து வந்தார்.
இதனால் விசிக திருமாவளவனால் 6 மாத காலம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா விசிக கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அவர் அடுத்து எந்த கட்சிக்கு செல்வார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் ஏற்படத் தொடங்கியது.
ஆதவ் அர்ஜுனா திமுகவை எதிர்த்து இருந்தால் பாஜகவின் பி- டீம் என்று சமூக வலைதளத்தில் பரவியது. தவெகவிற்கு ஆதரவு கொடுத்தால் விஜய் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பாமக விவசாயிகள் மாநில மாநாடு திருவண்ணாமலை வருகிற 24 ஆம் தேதி நடத்த இருக்கிறது. அதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று திருவண்ணாமலை நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி தலைமை ஏற்று நடத்தி இருந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் விசிக-வில் இருந்து விலகி இருக்கும் ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணைய வாய்ப்பு உள்ளதா? என கேள்வி எழுப்ப அதற்கு ஜி கே மணி பாமகவில் இணைவதாக இருந்தால் பரிசீலனை செய்யப்படும் எனக் கூறி இருக்கிறார்.