1938 ஆம் ஆண்டு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மொழிப்போரில் சிறைக்கு சென்ற தாளமுத்து, நடராஜன் உள்ளிட்ட பலரும் பலியாகினர். அவர்களை சிறப்பிக்கும் வகையிலும் நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நினைவு தினத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை ஏற்று நடத்தினார். பின்பு அங்கு வந்த செய்தியாளர்களை சந்தித்தும் பேசினார். அப்போது அவர் பேசியதில் “இந்தி திணிப்பை எந்த காலத்திலும் தமிழன் ஏற்க மாட்டான்” என்று விளக்கமளித்த அவர் பத்திரிக்கையாளர் கேட்ட பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
அவர் கூறிய பதிலானது: “பெரியார் ஒரு சகாப்தம்” அவரை நினைவு கொண்ட அளவிற்கு தற்போது பேசி வருபவர்களை இந்த உலகம் நினைவு கொள்ளாது. அதேபோன்று தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் ஒரு சகாப்தம் என்று நமது முன்னாள் தலைவர்களின் பெருமைகளை கூறினார்.
1921 இல் பெரியார் இல்லை என்றால் இன்று உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் உருவாகி இருக்காது, பட்டப்படிப்புகளை எவரும் பெற்றிருக்க முடியாது, மேலும் அந்தஸ்து வாழ்க்கையையும் எவரும் வாழ்ந்திருக்க முடியாது என்றும் கூறினார். இவ்வாறு பெரியார் மக்களிடையே உயர்ந்து நிற்கும் நிலையில் அவரை கொச்சைப்படுத்த நினைத்தால் நிச்சயமாக அவர்களை அழிவு பாதைக்கு தான் கொண்டு செல்லும் என்றும் கூறினார்.
எனவே சீமான் மீது உள்ள குற்றச்சாட்டை அவர்தான் மெய்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பெண் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு சீமான் அநாகரிகமாக பதிலளித்த விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு பத்திரிக்கைத்துறையை கையாள்வது என்பது ஒரு ஆற்றல் மிக்க கலை அக்கலைக்கு சகிப்புத்தன்மை மிகவும் முக்கியம். அதே போன்று தான் அரசியலிலும் சகிப்புத்தன்மை இருந்தால் மட்டுமே ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அத்தகைய சகிப்புத்தன்மை சீமான் மற்றும் அண்ணாமலை இடம் இல்லை என்று கூறினார்.
“இப்போது நீங்கள் என்னிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன். ஐ ஆம் ரெடி எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன், என்கிட்ட சரக்கு இருக்கு அதற்கு ஏற்ற தைரியம் என்னிடம் உள்ளது. நான் ஓட மாட்டேன்” என்று கூறினார்.
மேலும் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கை துறையை அவமானப்படுத்துவது ஜனநாயகத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத விசயம். அரசியல்வாதி என்றால் ஒரு பக்குவம் வேண்டும். எனக்கு கோவம் வராதா? ஆனால் அது எனக்கு தேவையில்லாதது என்று அவர் கூறினார்.