குக்கர் என்பது தற்போது அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதம் வடிக்கும் முறையை தவிர்த்து தற்போது அனைவரும் சாதம் மற்றும் பல விதமான உணவு பொருட்களை குக்கரில் வைத்து தான் சமைக்கிறார்கள். இவ்வாறு தினமும் பயன்படுத்தக்கூடிய குக்கரை சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி என்று தெரியாமல் பலரும் உள்ளனர். இதனால் குக்கரில் அடைப்பு மற்றும் குக்கர் வெடிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே குக்கரை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்துவது என்பது குறித்து காண்போம்.
நாம் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள் தான் குக்கர் வெடிப்பதற்கு காரணமாக அமைகிறது. குக்கரின் மூடியில் பலவிதமான பகுதிகள் உள்ளன அவை 1. குக்கரில் நாம் விசில் போடக்கூடிய பகுதி Vent Tube 2. விசில் பகுதிக்கு அருகில் இருப்பது Safety Valve 3.Gasket 4.Gasket Release System 5.Whistle 6. கைப்பிடி.
நாம் குக்கரை அடுப்பில் வைக்கும் பொழுதே விசிலை போட்டு வைக்கிறோம். ஆனால் அவ்வாறு வைக்க கூடாது. குக்கரை அடுப்பில் வைத்து சிறிது நேரம் கழித்து அதாவது நீராவி வர ஆரம்பித்த பின்னரே விசிலை போட வேண்டும். இவ்வாறு செய்தால்தான் குக்கரில் ஏதேனும் அடைப்பு இருந்தாலும் நமக்கு முன்கூட்டியே தெரியவரும்.
குக்கரை நாம் அடுப்பில் வைக்கும் பொழுது Gasket Release System பகுதியை சுவற்றைப் பார்த்தவாறும் குக்கரின் கைப்பிடி பகுதி நம்மைப் பார்த்தபடியும் இருக்குமாறு வைக்க வேண்டும். ஏனென்றால் குக்கரில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் குக்கரில் உள்ள நீராவியானது காஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் பகுதியின் மூலம் வெளியேற்றப்படும். அவ்வாறு அந்தப் பகுதி நம்மை பார்த்தவாறு இருந்தால் வெளியேறக்கூடிய நீராவியானது நம் மீது அடித்து விடும். எனவேதான் அந்தப் பகுதியை சுவற்றைப் பார்த்தவாறு வைக்க வேண்டும்.
குக்கரில் மிகவும் முக்கியமான ஒன்று Gasket. நீங்கள் தினமும் மூன்று வேளை சமையலுக்கும் குக்கரை பயன்படுத்துகிறீர்கள் என்றால் குக்கரின் கேஸ் கட்டை திருப்பித் திருப்பி பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரே பக்கம் பயன்படுத்தாமல் அடுத்த முறை சமைக்கும் பொழுது வேறு பக்கமாக Gasket ஐ திருப்பி வைக்க வேண்டும். இவ்வாறு பயன்படுத்தினால் கேஸ் கட் ஐ நீண்ட நாளைக்கு பயன்படுத்தலாம்.
அதுமட்டுமன்றி குக்கரை திறந்தவுடன் அதில் உள்ள கேஸ் கட்டை எடுத்து விட வேண்டும். இல்லை என்றால் கேஸ்கட் லூசாகவும், அதில் வெடிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்தால் Gasket நீண்ட நாளைக்கு உழைக்கும் எனவே இரண்டு வருடங்கள் வரையிலும் இதனை பயன்படுத்தலாம்.
அடுத்ததாக குக்கர் மூடியில் உள்ள Vent Tube. குக்கரை பயன்படுத்தும் பொழுது இந்தப் பகுதி சுத்தமாக உள்ளதா அந்த துளையின் உள்ளே எந்த ஒரு பொருளும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறதா என்று பார்த்து விசிலை போட வேண்டும். குக்கர் மூடியை தூக்கி நம் கண்களின் மூலம் பார்க்கும் பொழுதே அந்த துளையில் எந்த ஒரு பொருளும் சிக்கிக் கொள்ளாமல் இருக்கிறதா என்பது தெரியும். அவ்வாறு ஏதேனும் ஒரு பொருள் சிக்கிக் கொண்டால் அதனை ஊசி அல்லது ஒரு குச்சியினை கொண்டு அதனை நீக்கி விட வேண்டும்.
அதே போன்று Safety Valve ல் அலுமினியம் கோட்டிங் மூலம் துளையானது அடைக்கப்பட்டு இருக்கும. அந்த துளையானது அடைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நல்லது. அதற்கு மாறாக அலுமினியம் கோட்டிங் நீங்கி இருந்தால் அந்த குக்கரை கடையில் கொடுத்து சரிபார்த்துக் கொள்வது நல்லது.
நிறைய வீடுகளில் குக்கரின் மூடியானது லூசாகவே இருக்கும். அதற்கு காரணம் நாம் குக்கரை அடுப்பில் வைத்து பயன்படுத்தும் பொழுது தீயின் அளவை அதிகமாக வைத்து பயன்படுத்துவது தான். எனவே குக்கரை அடுப்பில் வைக்கும் பொழுது தீயினை நடுத்தரமான அளவில் வைத்து பயன்படுத்த வேண்டும்.