ஒரு குழந்தை பிறந்த உடனேயே அது பிறந்த நேரத்தை குறித்து வைத்துக் கொண்டு ஒரு ஜாதகரிடம் கொடுத்து இந்தக் குழந்தை என்ன நட்சத்திரத்தில் பிறந்த உள்ளது? என்ன திதி? என்ன ராசி? மற்றும் எந்தெந்த எழுத்துக்களை கொண்டு இந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்? என்பதையெல்லாம் நாம் அறிந்து கொள்வோம். ஆனால் கட்டம் போட்டு எழுதக்கூடிய ஜாதகத்தினை அந்த குழந்தைக்கு எப்பொழுது எழுத வேண்டும் என்று ஒரு விதிமுறை உள்ளது. அது எப்பொழுது எழுத வேண்டும்? எந்த நேரத்தில் எழுத வேண்டும்? என்பது குறித்து காண்போம்.
பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு விதமான வழக்கம் உள்ளது. அந்த வழக்கம் என்பது குறித்து நமது வீட்டின் பெரியோர்கள் மற்றும் முன்னோர்களை கேட்டு தெரிந்துகொண்டு அவர்கள் கூறும் வழியில் ஜாதகத்தை எழுதிக் கொள்ளலாம்.
ஆனால் அப்படி எதுவும் எங்களுக்கு தெரியாது என்று கூறுபவர்கள் இதனை கடைபிடித்து கொள்ளலாம். ஒரு குழந்தை பிறந்து ஒரு வயதை கடந்த பின்னர் குழந்தைக்கான ஜாதகத்தை எழுதலாம் என்பது ஜோதிடத்தின் கணக்கு.
ஆனால் அவ்வாறு ஜாதகம் எழுதிய பின்னர் மூன்று வயதிலோ அல்லது நான்கு வயதிலோ ஜாதகத்தை மற்றவரிடம் கொடுத்து என் குழந்தை என்ன படிக்கும், எந்த வேலைக்கு செல்லும், எந்த வயதில் திருமணம் செய்யலாம் என்பது குறித்தெல்லாம் முன்கூட்டியே பார்க்க கூடாது. அவ்வாறு பார்க்கவும் ஜோதிடர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
ஒருவேளை வீட்டின் சூழ்நிலை அல்லது அக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றபோது அந்த ஜாதகத்தை கொண்டு அக்குழந்தைக்கான பலாபலன்களை மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு மட்டுமே பார்க்க வேண்டும். 12 வயதுக்கு மேல்தான் குழந்தைக்கான ஜாதகத்தையே பார்க்க வேண்டும்.
12 வயது வரை அதாவது பாலகர்களாக அவர்கள் இருக்கும் வரை தெய்வத்தின் வாக்குப்படியே அனைத்தும் நிகழும் என்பதும் ஒரு ஐதீகம். எனவே ஜாதகத்தினை ஒரு வயதிற்கு பின்பு எழுதி, அதனை 12 வயதுக்கு மேல் தான் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.
ஆனால் பெண் குழந்தைகள் 9 வயதிலேயே அல்லது 10 வயதிலேயே பூப்பெய்து விடுகிறார்கள். அந்த சமயங்களில் ருது ஜாதகம் என்று ஒரு ஜாதகத்தினை ஜோதிடர்கள் எழுதி அதற்கான பலாபலன்களை விளக்குவார்கள். மற்றபடி ஆண் குழந்தைக்கும் சரி பெண் குழந்தைக்கு சரி குழந்தைகளின் திருமண வயதின் போது பொருத்தம் பார்ப்பதற்காக மட்டும் ஜாதகத்தினை பார்த்தால் போதும்.
அக்குழந்தையானது படிப்புக்காகவோ அல்லது வேலைக்காகவோ வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்றாலோ, உடல்நிலை சரியில்லை என்றாலோ ஜாதகத்தினை அவசியமான போது மட்டும் பார்த்தால் போதுமானது.