வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று பெரியோர்கள் வாழை மரத்தின் ஓடு ஒப்பிட்டு நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள். அவ்வளவு சிறப்பும், பெருமையும் வாய்ந்த இந்த வாழை மரத்தினை அனைவரது வீடுகளிலும் வைத்திருப்போம். இந்த வாழை மரத்தினுடன் மருதாணி செடியையும் சேர்த்து வளர்த்தால் நமக்கு ஐஸ்வரியமும், லட்சுமி கடாட்சமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மருதாணி செடி என்ற பெயரினை கேட்டாலே நாம் அதனை பறித்து நமது கையில் வைத்துக்கொள்ள தான் பார்ப்போம். ஆனால் அதன் ஒவ்வொரு பாகங்களும் நமக்கு பல விதங்களில் உதவி வருகிறது. இந்த மருதாணி செடி என்பது மகாலட்சுமி, ராமன் மற்றும் எமனின் வரம் பெற்ற ஒரு சிறப்பு செடியாகும். இத்தகைய மருதாணி செடியினை நமது வீட்டிற்கு முன்புறம் தான் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பூவில் இருந்து வரக்கூடிய வாசனையினால் நமது வீட்டிற்கு வரக்கூடிய தீய சக்திகள் மற்றும் விஷப் பூச்சிகளை உள்ளே வர விடாது. எந்த அளவிற்கு மருதாணி செடியானது செழுமையாகவும், செழிப்பாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்மிடம் செல்வமும், செல்வாக்கும் வந்து சேரும்.
மருதாணி இலைகளை அரைத்து நமது கையில் வைத்துக் கொள்வதன் மூலம் தீய சக்திகள் எதுவும் நம்மை நெருங்காது. துளசி செடிக்கு எவ்வாறு மாடம் வைத்து வழிபடுகிறோமோ அதே மாதிரி மருதாணி செடியினையும் வழிபடலாம். ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மருதாணி இலை, பூ, விதை இவற்றினை நிழலில் காயவைத்து பின்னர் தூபத்தில் போட்டு நமது வீட்டிற்கு காட்டுவதன் மூலம் எதிர்மறையான ஆற்றல்கள் நீங்கி நேர்மறையான ஆற்றல்கள் வீடு முழுவதும் பரவும்.
புதிய வீடு கட்டுபவர்களுக்கு தடை ஏற்படுகிறது என்றால் வாஸ்து செடியாக இந்த மருதாணி செடியினை வைத்து வளர்த்தால் பலன் கிடைக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு மருதாணி பூவினை வைத்து வழிபடுவதன் மூலம் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெற முடியும். உடல் வெப்பம் அதிகம் இருப்பவர்கள் இந்த மருதாணி இலையினை அரைத்து உள்ளங்கை மற்றும் கால்களில் வைப்பதன் உடல் சூடு தணியும். இளநரை, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகளுக்கும் மருதாணி இலைகளை அரைத்து பூசுவதன் மூலம் இந்த பிரச்சனைகள் ஏற்படுவதை குறைக்கலாம். அதேபோன்று தோல் நோய்களையும் குணமாக்கும்.
நமது வீட்டில் ஒரு விசேஷம் என்றால் வீட்டின் முன்பு வாழைமரம் கட்டுவது வழக்கம். ஏனென்றால் கூட்டம் அதிகம் இருக்கும் பொழுது உருவாகக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த காற்றினை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை வாழை மரத்திற்கு உண்டு. இதனால்தான் முந்தைய காலங்களில் இருந்தே நமது முன்னோர்கள் இந்த பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். வாழை மரத்தின் உடைய இலை முதல் தண்டு வரை அனைத்துமே நமக்கு உணவாகவும், மருந்தாகவும் விளங்கி வருகிறது.
வாழை இலையில் மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. மேலும் இந்த வாழை இலையில் பாலிபீனால் உள்ளது இதனால் நாம் வாழை இலையில் உண்ணக்கூடிய உணவு இன்னும் சுவையுடன் நமக்கு கிடைக்கும். வாழைத்தண்டானது நமது உடலில் உள்ள உப்பினை வெளியேற்றக் கூடிய தன்மை கொண்டது. எனவே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வாழைத்தண்டினை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சிறுநீரக கற்களையும் சரி செய்ய கூடிய நார்ச்சத்து மிகுந்த பொருளாக வாழைத்தண்டு விளங்குகிறது.
முக்கனிகளில் ஒன்றாக வாழைப்பழம் திகழ்கிறது. இறை வழிபாட்டிலும் கூட இந்த வாழைப்பழம் இல்லாமல் நாம் வழிபாடு செய்ய மாட்டோம். ஒவ்வொரு விதமான வாழைப்பழங்களும் ஒவ்வொரு விதமான உடல் பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய தன்மை கொண்டது. வாழை மரத்தினை நமது வீட்டின் நிலை வாசலுக்கு முன்புறமாக வைக்காமல் வீட்டிற்கு இடது மற்றும் வலது புறமாகவோ அல்லது பின்புறமாகவோ வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் வாழைமரம் மிகவும் குளிர்ச்சியானதாக இருப்பதால் அதன் அருகில் தேரை மற்றும் கொசுக்களின் இருப்பு அதிகமாக இருக்கும். எனவே வீட்டிற்கு முன்பு வைக்காமல் வேறு இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.