பானை வகைகள் மொத்தம் 60 வகைகளுக்கு மேல் உள்ளன. நமது சமையலுக்கு என வாங்கக்கூடிய பானையை நன்கு தட்டி பார்த்து வாங்க வேண்டும். பானையின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் இரண்டு தட்டு தட்டி பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால் நல்ல பானையாக இருந்தால் ஒரு விதமான சத்தமும், பானையில் ஓட்டை ஏதேனும் இருந்தால் அது வேறு விதமான சத்தமும் கொடுக்கும். மற்ற பாத்திரங்களை கடையிலிருந்து வாங்கிச் சென்று சாதாரணமாக ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ கழுவி விட்டு பயன்படுத்துவது போல இந்த மண்பானையை பயன்படுத்தக் கூடாது.
சமையலுக்கு மண்பானையை பயன்படுத்துவதற்கு முன்பு பானையை பக்குவப்படுத்த வேண்டும். அவ்வாறு பக்குவப்படுத்தாமல் சமைத்தால் அந்த மண்பானை விரைவிலேயே உடைந்து விடும். மண்பானையை பக்குவப்படுத்துவது என்பது நாம் அரிசியை கழுவக்கூடிய தண்ணீரை இந்த பானை முழுவதும் ஊற்றி அடுப்பில் வைத்து, அனலை குறைவாக வைத்துக் கொண்டு அந்த தண்ணீரை கொதிக்க விட வேண்டும். கொதித்த பின்னர் அதனை இறக்கி வைத்து அந்த தண்ணீரை ஆற விட வேண்டும். இதே போன்று தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.
அதன் பிறகு பானை முழுவதும் எண்ணெயை தடவி முன்பு செய்தது போன்றே அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு அந்தப் பானையை கழுவி விட்டு வெயிலில் காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் இந்த மண்பானையில் உள்ள மண்வாசனையும் வராது, பானையும் இறுகிக் கொள்ளும். இவ்வாறு செய்தால்தான் பானையும் உடையாமல் இருக்கும்.
சாப்பாடு வைப்பதற்கு எனவும், குழம்பு வைப்பதற்கு எனவும், அதிலும் மீன் குழம்பு வைப்பதற்கு எனவும் தனித்தனியாக மண்பானைகள் உள்ளன.மீனை கழுவுவதற்கு எனவும் தனியாக மண்பானை உள்ளது. அந்தப் பானையின் உள்ளே சொரசொரப்பாக இருக்கும். சிலர் அவர்களது வீட்டு கல்யாண விசேஷங்களில் பானைகளை பயன்படுத்துவர். அதனை அரசாணி பானை என்றும் கூறுவர்.
பொங்கல் விழாவின்போது பொங்கல் வைப்பதற்கு நாம் வாங்கக்கூடிய பானை ஓவியப் பானை என்று கூறுவர். உடல்நிலை சரியில்லாத போது கஞ்சி வைப்பதற்கு எனவும் கஞ்சி பானை என ஒன்று தனியாக உள்ளது. இவ்வாறு பலவிதமான பானைகள் உள்ளன. தண்ணீர் குடிப்பதற்கு என டம்ளர், தண்ணி ஊற்றி வைக்க குடம், காய்கறிகளை கெட்டுப் போகாமல் வைத்துக் கொள்ள மண்பானை ஃப்ரிட்ஜ் போன்ற பலவிதமான பொருட்கள் மண்பானைகளில் உள்ளது.
இந்த மண் பானைகளை பார்ப்பதற்கு சாதாரண மண்பொருள் போன்று தான் நமக்கு தெரியும். ஆனால் இந்த மண்பானைகளை செய்வதற்கு தேவையான மண்ணை மழை காலங்கள் இல்லாத பொழுது தான் ஆங்காங்கே இருந்து சிறிது சிறிதாக எடுத்து வருவர். இவ்வாறு கொண்டு வந்த மண்ணை காய வைத்து, கொப்புரையில் போட்டு ஊற வைத்து, அதில் கல் இல்லாமல் பிரித்து எடுத்து, அந்த மண் பதத்திற்கு வர வேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுவதும் அதனை கால்களால் மிதிப்பர்.
இறுதியாக அந்த மண்ணை திருகையில் போட்டு பானை வடிவில் செதுக்கி எடுப்பர். பின்பு அதனை வெயிலில் காய வைத்து, சூலையில் அந்த மண் பானைகளை வேய்த்து அதன் பிறகு தான் மண் பானையாக நமது கைக்கு வருகிறது. இவ்வளவு வேலைகள் இந்த மண்பானை செய்வதில் இருக்கிறது.