அமாவாசை என்ற நாளானது முன்னோர்களை வழிபடுவதற்கான நாளாகும். பித்ரு காரியங்களுக்கு உரிய நாளாகவும் இது திகழ்கிறது. நமது வீட்டில் இறந்தவர்களின் திதிகளை சரியாக நினைவில் வைத்து, அவர்களுக்கான வழிபாடுகளை செய்வதற்கு என அமையப்பெற்ற நாள் தான் இந்த அமாவாசை நாள். இத்தகைய அமாவாசை நாட்களை பித்ரு காரியங்களுக்கு என்று தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, மங்கள காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.
ஒருவேளை அமாவாசை நாட்களில் நமது வீட்டில் ஏதேனும் ஒரு பூஜை செய்வதாக இருந்தாலும் கூட, பிதுர் கடனை செய்த பிறகுதான் பூஜை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. உதாரணமாக அமாவாசை நாட்களில் ஒருவரது பிறந்த நாள், கல்யாண நாள் அல்லது ஏதேனும் ஒரு பண்டிகை இது போன்ற விசேஷம் வந்து விடுகிறது என்றால், முதலில் தர்ப்பணம் என்பதை செய்துவிட்ட பிறகு தான் அந்த விசேஷங்களை கொண்டாட வேண்டும்.
அமாவாசை நாட்களில் நமது வீட்டிற்கு வருகின்ற நமது முன்னோர்களுக்கு, நமது வீட்டை பார்த்த உடனேயே தெரிந்து விட வேண்டும். அதாவது நமக்காக நமது குடும்பத்தினர் இந்த நாளை ஒதுக்கி உள்ளனர் என்று. இதற்காகத்தான் அமாவாசை நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது என்று கூறுகின்றனர்.
திருமண வீடுகளில் வீட்டிற்கு முன்பாக இரண்டு பேர் நின்று வருகின்ற அனைவரையும் வரவேற்பர். அது திருமண வீடு என்று நமக்கு தெரியும், இருந்தாலும் வீட்டிற்கு முன்பாக இருவர் நின்று நம்மை வரவேற்பர். அதனைப் போன்று தான் அமாவாசை நாட்களில் நமது முன்னோர்கள் வருகின்ற வேளையில், நமது வாசலில் கோலம் போடாமல் இருப்பது அவர்களை வரவேற்பதற்கு சமமாக இருக்கும்.
ஒருவேளை அமாவாசை நாளில் நமது வாசலில் கோலம் போட்டு இருந்தால், ‘நமது குடும்பத்தினர் அவர்களது வேலையை செய்ய துவங்கி விட்டார்கள் போல, நமக்காக இந்த நாளை ஒதுக்கவில்லை’ என்று நமது முன்னோர்கள் நினைத்துக் கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் நினைத்து சென்று விடுவார்கள் அல்லது மன வருத்தத்துடனே நமது வீட்டிற்குள் வருவார்கள்.
இவ்வாறு அமாவாசை நாட்களில் கோலம் போடுவதை மட்டும் தவிர்த்து விட்டு, வீட்டிற்குள் நாம் என்ன வேலை செய்ய வேண்டுமோ அதனை செய்து கொள்ளலாம். முன்னோர்களுக்கான வழிபாட்டினையும் சிறப்பாக செய்து கொள்ளலாம்.