பணத் தட்டுப்பாடு மற்றும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க செய்ய வேண்டிய தானம்..!! கண்டிப்பாக கடவுள் அருள் புரிவார்..!!

Photo of author

By Janani

பணத் தட்டுப்பாடு மற்றும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க செய்ய வேண்டிய தானம்..!! கண்டிப்பாக கடவுள் அருள் புரிவார்..!!

Janani

நமது உணவு பண்டங்களிலேயே மிகவும் பிரதானமான பொருள் என்றால் அரிசி தான். இந்த அரிசியை மற்றவர்களுக்கு தானமாக தருதல் என்பது தொன்று தொட்டு நமது பெரியோர்கள் செய்து கொண்டிருந்த ஒரு அழகான பழக்கமும் கூட. வீட்டிற்கு மடிப்பிச்சை கேட்டு வருபவர்கள் அரிசியை தானமாக பெற்றுச் சென்று, அதனை தனது பிரார்த்தனைக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

அதேபோன்று ஒவ்வொரு இடங்களில், ஒவ்வொரு விதமான பண்டிகைகளை கொண்டாடும் பொழுது சில பழக்கங்களை நமது முன்னோர்கள் கடைபிடித்துள்ளனர். அதாவது புரட்டாசி மாதத்தில் பெருமாளின் பாடல்களை பாடிக் கொண்டு அட்சய பாத்திரத்தை ஏந்தி வருபவர்களுக்கு, நமது முன்னோர்கள் அரிசியை தான் தானமாக வழங்குவார்கள்.

முந்தைய காலங்களில் ஏதேனும் ஒரு ஊரில் பண்டிகை என்றால் அவர்கள் வீடு வீடாகச் சென்று பண்டிகையை அறிவிப்பார்கள். அப்பொழுது மற்றவர்கள் அவர்களால் முடிந்த தானியத்தை தானமாக கொடுப்பார்கள். கம்பு, கேழ்வரகு, நெல், அரிசி இது போன்றவைகளை தானமாக கொடுப்பார்கள். இந்த தானியங்களை அன்னதானத்திற்கு என அந்த கோவிலில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நாமும் அரிசியை தானமாக வழங்கலாம். அவ்வாறு வழங்குவதன் மூலம் பல புண்ணியங்களை நாம் பெற முடியும். நம்மால் பெரிய அளவில் அரிசியை தானமாக கொடுக்க முடியாவிட்டாலும் கூட, தினமும் நாம் சமைப்பதற்கு என அரிசியை எடுக்கும் பொழுது ஒரு கைப்பிடி அளவு மட்டும் தனியாக எடுத்து, ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ அந்த அரிசி சேர்ந்த பின்னர், அந்த அரிசியை நாம் தானமாக கோவில்களில் கொடுத்து விடலாம்.
இந்த அரிசியை கோவில்கள், ஆசிரமம், விடுதிகள், அனாதை இல்லம், ஏழை எளிய மக்கள் என யாருக்கு வேண்டுமானாலும் தானமாக வழங்கலாம். நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அரிசியை தானமாக கொடுத்தால் போதும்.

அரிசியை தானம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும்:
அரிசியை தானமாக வழங்கினால் அந்தக் குடும்பத்தில் பசி மற்றும் பஞ்சம் என்ற கொடுமை ஏற்படாமல் இருக்கும். நல்ல வசதியான குடும்பமாக இருந்தாலும் கூட எவ்வளவு தான் சமைத்தாலும் ஏதேனும் ஒருவர் அல்லது இருவருக்கு பற்றாமல் போய்விடும். அவ்வாறு இருக்கக்கூடிய வீடுகளில் தரித்திரம் குடியேறி இருப்பதாக அர்த்தம்.

ஆனால் அரிசியை தானமாக வழங்கும் பொழுது அந்த தரித்திரம் என்பது நீங்கி, நாம் போதுமான அளவு சமைத்தாலும் கூட, அந்த உணவானது மேலும் இருவர் சேர்ந்து சாப்பிடக் கூடிய அளவிற்கு உயர்ந்து இருக்கும். அப்பேர்ப்பட்ட நல்ல தன்மையை அந்த வீட்டிற்கு கொடுக்கும்.

அரிசியை தானமாக வழங்குவதால் செல்வ செழிப்பு ஏற்படும். ஜென்ம ஜென்மங்களாக இருந்து வந்த தோஷங்கள் விலகும். அன்னபூரணி தேவியின் அருள் கண்டிப்பாக அந்த வீட்டில் நிலைத்து இருக்கும். தனம், தானியங்கள் பெருகி வளரும்.

எனவே நமக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஏழை எளிய மக்களுக்கு அரிசியை தானமாக வழங்குவதால் இத்தனை பலன்களையும் நம்மால் பெற முடியும். ரேஷன் கடைகளில் கொடுக்கக்கூடிய அரிசியை நாம் பயன்படுத்துவதில்லை என்றால் அதனைக் கூட ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

கடைகளில் வழங்கக்கூடிய அரிசி நமக்கு குறைவாக தோன்றினாலும் கூட, அது ஏழை மக்களுக்கு பெரியதாக தோன்றும். எனவே நம்மால் முடிந்த அளவிற்கு அரிசியை தானம் கொடுப்பதால் பல நன்மைகளை நாமும் நமது குடும்பத்தினரும் பெறலாம்.