இறந்தவர்களின் ஆன்மா நமது வீட்டிற்கு வருமா..?? அவ்வாறு வந்தால் அதற்கான அறிகுறி என்ன..??

Photo of author

By Janani

இறந்தவர்களின் ஆன்மா நமது வீட்டிற்கு வருமா..?? அவ்வாறு வந்தால் அதற்கான அறிகுறி என்ன..??

Janani

ஒரு மனிதன் பிறப்பதும் இறப்பதும் இயற்கை தான். ஒரு மனிதன் பிறக்கும் பொழுது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். ஆனால் இறக்கும் பொழுது அந்த குடும்பத்திற்கு அதிகப்படியான வேதனையை கொடுக்கும். எதிர்பாராமல் ஒரு உயிர் இறந்தது என்றால், அந்த உயிரைச் சார்ந்த அன்பு கொண்டவர்கள் மிகவும் வேதனை அடைவார்கள்.

நீ ஏன் என்னை விட்டுப் பிரிந்தாய்? உனக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு என்று அந்த ஆன்மாவை நாம் பார்த்து கூறும் பொழுது, அந்த ஆன்மா நம்மை விட்டு பிரியாமல் நம் உடனே தான் இருக்கும். அவ்வாறு அந்த ஆன்மா இந்த உலகத்தை விட்டு செல்லாமல் நம்முடன் தான் இருக்கிறது என்பதை, எவ்வாறு உணர்வது என்பது குறித்து தற்போது காண்போம்.

இறந்தவர்களின் ஆன்மாவானது இறந்த உடனே இந்த உலகத்தை விட்டு செல்லாது. இருந்த அந்த ஆன்மாவானது தனது உடலுக்கு எந்த விதமான அடக்கத்தை செய்கிறார்கள், எவ்வாறு செய்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டு இருக்குமாம். இறந்த அந்த ஆன்மாவானது கணப்பொழுதில் எமலோகத்திற்கு சென்று மீண்டும் பூலோகத்திற்கு வந்து விடும்.

ஒரு உயிர் பிரிந்த பிறகு அந்த ஆன்மாவானது 12 நாட்களுக்கு இந்த பூலோகத்தில் தான் இருக்குமாம். எனவே தான் நமது முன்னோர்கள் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் தொடர்ந்து 12 நாட்களுக்கு இறந்தவர்களின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி, தண்ணீர் வைத்து, இறந்தவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படையலாக வைத்து வழிபடுவார்கள்.

அந்த 12 நாட்களும் அந்த ஆன்மாவானது தன்னைப் பிரிந்து நமது குடும்பத்தினர் எவ்வாறு வருத்தம் கொள்கிறார்கள் என்பதையும், நமக்கு எவ்வாறு சடங்குகளை செய்கிறார்கள் என்பதையும் கவனிக்கும். அந்த 12 நாட்களும் நமது வீட்டை சுற்றி தான் அந்த ஆன்மா இருக்கும்.

இறந்தவர்கள் நல்லது செய்து இருந்தார்கள் என்றால், அந்த ஆன்மாவானது எமலோகத்திற்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்று விடும். ஆனால் கெட்டது செய்தவர்களாக இருந்தால் எமலோகத்திற்கு செல்லும் வழியில் பல்வேறு பிரச்சனைகளையும், துன்பங்களையும், கண்ணீரையும், இடையூறுகளையும் பெற்ற பின்னரே எமலோகத்திற்கு செல்வார்கள்.

இந்த ஆன்மாவானது நமது வீட்டில் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு பல விதமான அறிகுறிகள் உள்ளன.

1. நாம் தனிமையில் இருக்கும் பொழுது நமது ஆழ்மனதில் நம்முடன் யாரோ இருக்கிறார்கள் என்பது போன்றும், எந்தவித பயமும் இல்லாமல் இருப்பது போன்றும் உணர்ந்தால் நமக்கு மிகவும் நெருங்கிய ஒரு ஆன்மா நமது அருகில் இருப்பதாக அர்த்தம்.

அதே சமயம் நாம் தனிமையில் இருக்கும் பொழுது நமது அருகில் யாரோ ஒருவர் இருப்பது போன்றும், ஒரு விதமான பயம் ஆழ்மனதில் உருவாகிறது என்றாலும், ஏதோ ஒரு கெட்ட ஆன்மா நமது அருகில் இருக்கிறது என்று அர்த்தம்.

2. இரவு நேரத்திலோ அல்லது பகல் நேரத்திலோ நமது வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அல்லது மின்விளக்குகள் திடீரென அணைந்து எரிவது. இதுவும் நமது வீட்டில் ஆன்மா இருப்பதை உறுதி செய்கிறது.

3. இறந்த அந்த ஆன்மாவினுடைய உடைகள், பேனாக்கள், கை கடிகாரம் மற்றும் அந்த ஆன்மாவிற்கு பிடித்தமான பாடல்கள், திரைப்படங்கள் இதுபோன்று ஏதேனும் ஒரு வகையில் அந்த இறந்த ஆன்மாவிற்கு பிடித்தமான பொருள் உங்களிடம் வந்து கொண்டே இருக்கிறது என்றாலும், ஆன்மா உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம். அந்த ஆன்மா உங்களிடம் ஏதேனும் ஒன்றை பேச முயற்சிக்கிறது என்று அர்த்தம்.

4. உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது, மற்ற அறைகளின் வெப்பநிலையை காட்டிலும் நீங்கள் இருக்கும் அறையின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கிறது என்றாலும், உங்கள் வீட்டில் ஆன்மா இருக்கிறது என்று அர்த்தம்.

5. உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கடிகாரம் திடீரென நின்று நின்று ஓடினாலும் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அடிக்கடி நின்று கொண்டாலும் உங்கள் வீட்டில் ஆன்மா இருக்கிறது, அந்த ஆன்மா உங்களிடம் பேச விரும்புகிறது என்று அர்த்தம்.