நாம் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும், பரம்பரை பரம்பரையாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் ஒரு வீட்டினை கட்டுகிறோம். அவ்வாறு ஆசை ஆசையாக கட்டக்கூடிய வீடுகளில் நாம் செய்யக்கூடிய சிறு சிறு வாஸ்து பிரச்சனைகளினால் ஒரு குடும்பம் சிதற கூடிய சூழ்நிலை கூட ஏற்படலாம்.
முந்தைய காலங்களில் வாழ்ந்த மனிதர்கள் சிறிய வீடுகளில் வாழ்ந்தாலும் கூட, ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனைகள் இல்லாமலும், பெரிய அளவில் கடன் இல்லாமலும் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதேனும் ஒரு நோய் தாக்கத்தால் தான் இருக்கின்றனர்.
இந்த உடல் ஆரோக்கிய குறைபாடு என்பது நமது வீட்டின் கிழக்கு பகுதியில் நாம் செய்யக்கூடிய சில வாஸ்து பிரச்சனைகளால் ஏற்படும். கிழக்கு மத்திமம் அல்லது வடக்கு மத்திமத்தில் படிகட்டுகளை போடக்கூடாது. இவ்வாறு படிக்கட்டுகளை போட்டால் பொருளாதார பிரச்சனைகள் மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடும்.
மேற்கு அல்லது தெற்கு மத்திமத்தில் தான் படிக்கட்டுகளை போட வேண்டும். அதேபோன்று தென்மேற்கு மூலையிலும் படிக்கட்டுகளை போடக்கூடாது. மேற்கு மத்திமத்தில் தான் தண்ணீர் டேங்க்கை வைக்க வேண்டும் இதுதான் சரியான வாஸ்து முறை.
குபேர மூலை என்று சொல்லக்கூடிய அந்த மூலையில் தண்ணீர் டேங்க் வைக்க கூடாது. மேற்கு மத்திமம் மற்றும் தெற்கு மத்திமத்தில் படிக்கட்டுகளை கட்டும் பொழுது அதற்கான ஹெட் ரூம்களை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் மற்ற மூலைகளில் படிகளை கட்டும் பொழுது ஹெட் ரூம்களை அமைக்க கூடாது.
கனிம வளங்களை அதிகம் பயன்படுத்தக்கூடிய கிரானைட் கல்லை, படிகட்டுகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் வாஸ்து கூறுகிறது. கிரானைட் கல் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வது நல்லது. வீடுகளில் சிறிய கேட் ஒன்றும் கார் செல்வது போல ஒரு கேட் வைப்பதும் சரியான முறைதான்.
ஆனால் கார் செல்வது போன்ற கேட், அதாவது பெரிய கேட்டுகளை இரண்டாக வைக்க கூடாது. சிறியது பெரியது என வைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரிய கேட் இரண்டு வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் பொருளாதார ரீதியான மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும்.
வீட்டின் நிலை வாசலும், கொல்லைப்புற நிலை வாசலும் நேருக்கு நேர் தான் இருக்க வேண்டும். வீட்டின் நிலை வாசல் ஒரு மூலையிலும், கொள்ளை புறவாசல் மற்றொரு மூலையிலும் என இருக்கக் கூடாது. இவ்வாறு மாற்றி வைத்தால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு வயிறு மற்றும் இருதய பிரச்சனைகள் ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.