நடிகர், இயக்குனர் என சினிமாவில் பல அவதாரங்களை எடுத்த கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளையும் விமர்சிக்க துவங்கினார். எனவே, அவரை டிவிட்டர் அரசியல்வாதி என பலரும் கிண்டலடித்தனர். ‘இதுதான் உங்களுக்கு பிரச்சனையா?’ என அரசியல் கட்சி துவங்கி அதற்கு மக்கள் நீதி மய்யம் என பெயரும் வைத்து மதுரையில் முதல் மாநாட்டை நடத்தினார்.
அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி ரஜினிகாந்த் 25 வருடங்களக அவரின் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அவரின் நண்பரும், போட்டி நடிகருமான கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கமலும் தீவிர அரசியலில் ஈடுபட்டு மக்களை சந்தித்து பேசினார். அவரின் கட்சி உறுப்பினர்கள் தேர்தலிலும் போட்டியிட்டார்கள்.
ஆனால், எதிர்பார்த்த வாக்குகளை அவர்கள் பெறவில்லை. 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்ட கமலும் தோற்றுப்போனார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். அதன்பின் கமலின் அரசியல் வேகம் கொஞ்சம் குறிந்து போனது. அவரின் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறிவிட்டனர்.
கமலும் திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டர். விக்ரம் படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அடுத்து தக் லைப் உள்ளிட்ட பல படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். அதோடு, கட்சி ஆரம்பித்தபோது திமுகவை திட்டி வந்த கமல் இப்போது திமுகவுடன் இணக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில், திடீரென இன்று காலை சென்னையில் உள்ள தலைமை செயலகத்திற்கு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல் ‘வக்பு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களுக்காக ஆளுநருக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. அந்த மகிழ்ச்சியில் பங்கெடுக்கவே முதல்வரை பார்க்க வந்தேன்’ என பேசியிருக்கிறார்.