சத்தியம் என்பது நமது வார்த்தையில் தான் இருக்கிறது. அதாவது நாம் சொல்கின்ற வார்த்தையை சரியாக கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதை தான் சத்தியம் குறிக்கிறது. இதனைத் தவிர்த்து கையில் அடித்து சத்தியம் செய்வது, தலையில் அடித்து சத்தியம் செய்வது, கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வது இவை அனைத்தும் தேவையில்லாத ஒன்றுதான்.
இவ்வாறு சத்தியம் செய்து விட்டு சத்தியத்திற்கு மாறாக நடந்து கொண்டாலும், நமது நடவடிக்கையே மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும். சிறிய வயதில் இருந்தே மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக வளர வேண்டும். ஒருவர் மீது சந்தேகம் என்பது தோன்றி, நம்பிக்கை இல்லாமல் போகும் பொழுது மட்டுமே சத்தியம் என்ற வார்த்தை அங்கு பேசப்படுகிறது.
தவிர்க்க முடியாத சூழ்நிலை, அதாவது தன்னை எந்த விதத்திலும் நிரூபிக்க முடியவில்லை என்கின்ற சூழ்நிலையில் வேண்டுமானால் கையில் அடித்து சத்தியம் செய்து கொள்ளலாம். இதனை தவிர்த்து தலையில் அடித்து சத்தியம் செய்வது என்பது கூடவே கூடாது.
ஏனென்றால் தலையில் அடித்து சத்தியம் செய்யும்பொழுது ஏதேனும் ஒரு சிறிய பொய்யை நாம் கூறிவிட்டாலும் கூட, அது எதிர்மறையான பலன்களை கொடுத்து விடும். ஒரு சிறிய பொய்யை கூறினால் நல்லது நடக்கும் என எண்ணி, தலையில் அடித்து சத்தியம் செய்துவிட்டால் நாம் நினைத்துக் காரியம் எதிர் மாறாக நடந்து விடும்.
இவை இரண்டையும் தாண்டி அசுர பலத்தைக் கொண்டதுதான் கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வது. இது போன்ற சத்தியத்தை கண்டிப்பாக செய்யவே கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஏனென்றால் கற்பூரம் என்பது அக்னி. இந்த அக்னியை சாட்சியாக வைத்து தான் இந்து மதத்தில் அனைத்து விதமான சடங்குகளும் நடைபெறும்.
பிறப்பு முதல் இறப்பு வரை அக்னி இல்லாமல் எந்த ஒரு விஷயமும் நடக்காது. இந்த உலகிற்கே அடிப்படை ஆகாரமாக திகழ்வது நீர். இந்த நீர் உருவாவதற்கும் இந்த அக்னி தான் காரணமாக இருக்கிறது. இவ்வாறு விளங்கும் அக்னியை அணைத்து சத்தியம் செய்வது என்பது கண்டிப்பாக செய்யவே கூடாது.
தவிர்க்க முடியாத சூழ்நிலை அதாவது தன்னை மெய்ப்பிக்க வேண்டும் நான் உண்மையானவன் தான், என்று மற்றவர்களுக்கு உணர்த்த வேறு எந்த வழியும் கிடைக்காத பொழுது அக்னியை வளர்த்து, அதாவது ஒரு கற்பூரத்தை ஏற்றி வைத்து அதன் முன்பாக நின்று சத்தியம் செய்யலாமே தவிர, அந்த அக்னியை அடித்து அணைத்து சத்தியம் செய்யக் கூடாது. இது முற்றிலும் தவறான ஒரு செயலாகும்.
இப்படி கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வது தற்காலிகமாக உங்களை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றுமே தவிர, நீங்கள் பொய் கூறி அந்த சத்தியத்தை செய்திருந்தால் அந்த பாவம் உங்களது அடுத்த தலைமுறைகளை கண்டிப்பாக பாதித்து விடும்.