பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் என்பவர் 50 கோடிக்கு ஒரு நாயை வாங்கியிருக்கிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு செய்தியில் வெளியாகி பலரையும் வயிற்றெரிச்சல் பட வைத்தது. அவனவன் வாழவே வழியில்லாம இருக்கும்போது 50 கோடிக்கு நாயா?.. அந்த காசை பிரித்து ஏழைகளுக்கு கொடுத்து உதவியிருக்கலாம் என சமூகவலைத்தளங்களும் பலரும் கோபப்பட்டார்கள்.
மேலும், தொழிலதிபர் சதீஷுக்கு நாய் வளர்ப்பது பொழுதுபோக்கு. இவரிடம் பல வகையான வெளிநாட்டு நாய்கள் இருக்கிறது என்றெல்லாம் பில்டப் ஏற்றினார்கள். சதிஷும் 50 கோடி விலை என சொல்லப்பட்ட அந்த நாயை கூட்டி வந்து மீடியாக்களுக்கு போஸ் கொடுத்தார்.
இந்நிலையில், அமலாக்கத்துறையினர் சதீஷின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அந்த நாயை எவ்வளவு விலைக்கு வாங்கினீர்கள்?. அதற்கான ஆதாரம் எங்கே? என கேட்க சதீஷோ மழுப்பலான பதிலை கூறியிருக்கிறார். அதோடு, அந்த நாயும் அவருடன் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில்தான் திடுக்கிடும் தகவல் வெளியானது.
தன்னை ஒரு பிரபல நாய் வளர்ப்பாளராக காட்டிக்கொள்வதற்காக ஊடக நண்பர் ஒருவர் உதவியுடன் சதீஷ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. அந்த நாயின் விலை 50 கோடியெல்லாம் இல்லை என்பதும் அதன் விலை ஒரு லட்சம் மட்டுமே என்பது தெரியவந்தது. அதோடு, அந்த நாய் சதீஷுடையது இல்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்த அந்த நாயை அழைத்துக்கொண்டு வந்து 50 கோடி என சதீஷ் ஏமாற்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இப்போது சதீஷ் என்ன தொழில் செய்கிறார்? அவரின் மாத வருமானம் எவ்வளவு, அவரின் செலவுகள் என எல்லாவற்றை பற்றியும் வருமானவரித்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.