உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்டது. எனவே இதனை வீட்டில் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். வீட்டில் உப்பு குறையாமல் இருந்தால் செல்வ வளமும் குறையாமல் இருக்கும். இந்த உப்பு என்பது செல்வ வளத்தை பெருக்குவதுடன், பல விதமான திருஷ்டிகளையும் போக்கக் கூடியது.
உப்பு வாங்குவதாக இருந்தால் முடிந்த அளவிற்கு வெள்ளிக் கிழமைகளில் வாங்குவது மிகவும் சிறப்பு. அதேபோன்று உப்பினை மண் ஜாடி அல்லது பீங்கான் ஜாடியில் தான் வைக்க வேண்டும். எவர்சில்வர், பித்தளை, இரும்பு போன்ற பொருட்களில் உப்பினை வைக்க கூடாது. இது உடல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் பல தீங்குகளை விளைவிக்கும்.
வீட்டின் செல்வ வளத்தை பெருக்குவதற்கும், வீட்டில் இருக்கும் கண் திருஷ்டிகளை நீக்குவதற்கும் இந்த கல் உப்பினை கொண்டு செய்யக்கூடிய பரிகாரம் மிகுந்த பலன்களை கொடுக்கக்கூடிய சிறந்த பரிகாரமாகும். எனவே செல்வ வளம் உயர மற்றும் கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டிய ஐந்து விதமான கல் உப்பு பரிகாரத்தை இந்த பதிவில் காண்போம்.
1. வெள்ளிக்கிழமை நாட்களில் புதியதாக உப்பினை வாங்கி உப்பு ஜாடி முழுவதுமாக நிரப்பி கொள்ள வேண்டும். அந்த உப்பினுள் ஒரு துண்டு வசம்பினை மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் வீட்டில் தேவையற்ற மருத்துவ செலவுகள் வருவதை தடுத்து நிறுத்தும்.
வசம்பு என்பது உடல் நிலைக்கு மிகவும் நல்லது. எனவே இதனை உப்பில் வைத்து பயன்படுத்தும் பொழுது, செரிமான பிரச்சனைகள் வராமல் இருக்கும். மேலும் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டும்.
2. ஒரு சிறிய மண் ஜாடி அல்லது கண்ணாடி ஜாடியில் உப்பினை நிரப்பி, அதில் ஒரு விரலி மஞ்சள் மற்றும் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். இப்பொழுது இந்த ஜாடியை பூஜை அறையில் வைத்து, அதற்கு முன்பாக கண்ணாடி ஒன்றை வைக்க வேண்டும். அந்த கண்ணாடியில் அந்த உப்பு ஜாடியின் பிம்பம் படும்படி வைக்க வேண்டும்.
இவ்வாறு வைப்பதன் மூலம் பணவரவு அதிகரிக்கும், கடன் சுமை குறையும், நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும், வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை ஈர்த்துக் கொள்ளும். வாரத்திற்கு ஒரு முறை இந்த உப்பினை மாற்றிக் கொள்ளலாம்.
3. பிரம்ம முகூர்த்த நேரத்தில் கீழே அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் இரண்டு கால் தொடைகளின் மீது வைத்து கண்களை மூடி உங்களுக்கு என்ன வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமோ அதனை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அந்த உப்பினை தண்ணீரில் கரைத்து, கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்தால் நிச்சயம் உங்களது வேண்டுதல்கள் நிறைவேறும்.
4. இரண்டு மண் அகல் விளக்கில் சிறிதளவு கல் உப்பை போட்டுக் கொள்ள வேண்டும். அதில் ஒரு மண் அகல் விளக்கை நிலை வாசல் கதவுக்கு பின்புறம் வைத்து விட வேண்டும். இன்னொரு மண் அகல் விளக்கை உங்களது குளியல் அறையில் கைப்படாத இடத்தில் வைத்து விட வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டிகள் விலகும்.
இதனை மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். சிறிதளவு கல் உப்பை தண்ணீரில் கரைத்தும் குளிக்கலாம், இது உடல் சோம்பேறித்தனத்தை அகற்றும்.
5. ஒரு மண் அகல் விளக்கில் சிறிதளவு கல் உப்பு, 21 மிளகு, 3 அல்லது 4 கற்பூரம் ஆகியவற்றை வைத்து குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோரின் தலையை சுற்றி திருஷ்டி கழிக்கலாம். இவ்வாறு சுற்றிய பின்னர் அந்த கற்பூரத்தை வாசலில் வைத்து எரித்து விட வேண்டும். மிளகினை வீட்டின் நான்கு புறங்களிலும் தூக்கி எறிந்து விட வேண்டும். உப்பினை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் திருஷ்டிகள் அனைத்தும் விலகும், மனதில் இருக்கும் பாரம் விலகி மன நிம்மதி ஏற்படும், குடும்பத்தில் உள்ள அனைவரையும் அமர வைத்து திருஷ்டி கழிப்பதன் மூலம் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் விலகி குடும்ப ஒற்றுமை ஏற்படும்.