ஒவ்வொருவரும் ஆசை படக்கூடிய வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றால், பூஜை அறை என்பதை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேபோன்று பூஜை அறைக்கு உரிய சாஸ்திர சம்பிரதாயங்களை தவறாமல் கடைபிடிக்கவும் வேண்டும்.
ஒரு சிலர் தெய்வத்தின் மேல் கொண்ட ஆர்வத்தினால் நிறைய சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்திருப்பார்கள். இது போன்ற நிறைய சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்துக் கொண்டால், அதனை சரியான முறையில் பராமரிக்க முடியாது என்பதால் தான் நிறைய படங்களை பூஜை அறையில் வைக்க கூடாது என்கிறார்கள்.
தினமும் சுவாமி படங்களுக்கு உரிய வழிபாடுகள் மற்றும் பூஜைகளை தவறாமல் கடைபிடிக்க முடியும் என்பவர்கள், எத்தனை சுவாமி படங்களை வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் முடியாதவர்கள் தேவையான சுவாமி படங்களை மட்டுமே பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் மற்ற தெய்வங்களின் படங்கள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி, பெருமாள் ஆகிய சுவாமி படங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இதைத் தவிர்த்து உங்களுடைய இஷ்ட தெய்வங்களின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளலாம்.
அதேபோன்று திரௌபதி அம்மன், காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன் ஆகியவை சாந்தமான தெய்வங்கள் ஆகும். காளியம்மன், வனபத்ரகாளி இது போன்ற கடவுள்கள் ஆக்ரோஷமான கடவுள்கள் ஆகும். இது போன்ற கடவுள்களின் புகைப்படங்கள் உங்களது பூஜை அறையில் இருந்தால் கட்டாயம் தவறாமல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும்.
அதேபோன்று பூஜை அறையில் வழிபாடு செய்யும் பொழுது, நிறை சொம்பு தண்ணீர் வைப்பது என்பது மிக மிக அவசியம். நம்மை எவ்வாறு தினமும் சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ, அதே போன்று தான் பூஜை அறையையும், சமையல் அறையையும் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஊதுபத்தியை வைப்பதற்கு இப்பொழுதுதான் ஸ்டாண்ட் போன்ற பொருட்கள் வந்துவிட்டது. ஆனால் முந்தைய காலங்களில் ஊதுபத்தியை வாழைப்பழங்களில் தான் குத்தி வைப்பார்கள். அவ்வாறு வாழைப்பழங்களில் ஊதுபத்தியை குத்தி வைப்பதும் ஒரு சாஸ்திர வழிபாடாக கூறப்படுகிறது. அதாவது இதன் மூலம் திருஷ்டிகள் விலகுவதாகவும் கூறப்படுகிறது.
நாம் வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு கோவில்களுக்கும் செல்வோம். அவ்வாறு செல்லும் பொழுது அங்கு கொடுக்கக்கூடிய விபூதியை நமது பூஜையறையில் கொண்டு வந்து தான் வைப்போம். அவ்வாறு வைக்கப்படும் விபூதி பிரசாதங்களை 1 வருடம் அல்லது 1 வருடம் 3 மாதங்களுக்கு மேல் பூஜை அறையில் வைத்திருக்கக் கூடாது.
இது போன்ற விபூதிகளை ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு பேப்பர் அல்லது இலையில் வைத்து ஓடுகின்ற நீரில் கரைத்து விட வேண்டும். அதேபோன்று சுவாமி படங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது பூக்களை போட்டு வழிபட வேண்டும். அவ்வாறு வைக்கக்கூடிய பூக்களை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது.
உதாரணமாக வெள்ளிக்கிழமை சுவாமி படங்களுக்கு பூக்களை வைத்தால் சனிக்கிழமை அப்படியே விட்டு, ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக அந்த பூக்களை அகற்றி விட வேண்டும். காய்ந்த பூக்கள் ஒருபொழுதும் சுவாமி படங்களில் இருக்கக் கூடாது. ஒரு சிலர் ஒரு வாரம் முழுவதும் அப்படியே காய்ந்த பூக்களை வைத்திருப்பார்கள்.
அவ்வாறு வைத்திருப்பது மிகவும் தவறான ஒன்று.
காய்ந்துபோன மலர்களை அப்படியே வைத்திருந்தால் வீட்டில் பல தடைகளை ஏற்படுத்திக் கொடுத்து விடும். எனவே காய்ந்துபோன மலர்களை பூஜை அறையில் வைத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.