நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பதில்லை.
இந்நிலையில்தான், தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு நேற்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. அதில், கலந்துகொள்வதற்காக விஜய் நேற்று கோவை வந்தார். எனவே, எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என தவேக கட்சியினர் மற்றும் அவரின் ரசிகர்கள் திரண்டனர். அவரை பார்க்க விமான நிலையத்தில் கூட்டம் நின்றது. பலரும் பொருட்களை தள்ளி செல்லும் டிராலிகள் மற்றும் தடுப்பு கம்பிகள் மீது ஏறி நின்று கொண்டனர். இதனால், அவற்றில் பல சேதமடைந்தது.
இந்நிலையில், விமான நிலையத்தில் பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்ததற்காகவும், விமான நிலையத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதற்காகவும் கோவை போலீசார் தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.