சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.
பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் யாரேனும் இந்தியாவில் இருந்தால் அவர்களுக்கான விசாவும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது இரண்டு மகள்களுக்கும் இந்தியாவில் சிகிச்சை பெறவேண்டியிருப்பதால் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருக்கிறார்.
இவர் கடந்த சில நாட்களாகவே டெல்லியில் தங்கி தனது மகளுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை ஒரு கோடி வரை செலவு செய்துவிட்டேன். இந்திய அரசு என் விசாவை ரத்து செய்துவிட்டது. ஆனால், அதிகாரிகள் என்னை வெளியேற சொல்கிறார்கள். அடுத்த வாரம் தனது 2 குழந்தைகளுக்கும் இருதய அறுவை சிகிச்சை செய்யவிருப்பதால் மத்திய அரசு என் கோரிக்கையை ஏற்று டெல்லியில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார். இதையடுத்து இவருக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.