“கல்லடி பட்டாலும் படலாமே தவிர, கண்ணடி மட்டும் படக்கூடாது” என்பது பழமொழி. கண் திருஷ்டி என்பது வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. கண் திருஷ்டி என்பது ஒருவரை பார்த்து பிறர் பொறாமை பட்டாலும், ஆச்சரியப்பட்டாலும் அல்லது பெருமூச்சு விட்டாலும் அவர்களது எதிர்மறை ஆற்றல் அந்த மனிதனுடைய ஆராவை தாக்கி விடும்.
ஒருவர் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அவருடைய ஆரா தூய்மையாக இருக்க வேண்டும். ஆரா என்பது ஒரு மனிதனுடைய உயிர் சக்தியின் வெளிப்பாடு. இது உடலில் இருந்து சுமார் 5 சென்டிமீட்டர் வரை பரவி இருக்கும். எதிர்மறை ஆற்றல்கள் ஒருவரின் உடலில் இருக்கும் ஆராவின் உள் நுழைந்து விட்டால் அதுவே கண் திருஷ்டி எனப்படும்.
இது மனிதர்களுக்கு மட்டுமல்ல வீடு, கடை போன்ற அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும். வீடு மற்றும் கடைகளில் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தாலும் கண் திருஷ்டிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
கண் திருஷ்டியின் அறிகுறிகள்:
ஒருவர் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு உடல் சோர்வு, மன அழுத்தம், தொடர் உடல் நிலை பாதிப்பு, வேலை மற்றும் வணிகத்தில் தோல்விகள், குழந்தைகளை சரிவர பார்த்துக் கொள்ள முடியாமை, வீட்டில் உள்ள பொருட்கள் அடிக்கடி கீழே விழுந்து உடைதல், வீட்டில் இருக்கும் பூனைகள் வினோதமாக சத்தம் இடுதல் போன்றவை அவர்களது வீட்டில் ஏற்படும்.
கண் திருஷ்டி ஏற்படுவதை எவ்வாறு தவிர்ப்பது:
1.குழந்தைகளுக்கு கருப்பு நிற மை கொண்டு திருஷ்டி புள்ளி வைக்கலாம்.
2. வெளியில் செல்லும் பொழுது கருப்பு நிற கயிற்றை கழுத்தில், கை மணிக்கட்டில் அல்லது காலில் கட்டிக் கொண்டு வெளியில் சென்றால் கண் திருஷ்டிகள் தடுக்கப்படும்.
3. நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றை வைத்துக் கொண்டால் பாதுகாப்பு கவசமாக இருக்கும்.
4. வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழையும் முன்பு கை, கால்களை கழுவி விட்டு உள்ளே நுழைய வேண்டும்.
5. வீடு மற்றும் கடைகளுக்கு பூசணிக்காய் சுற்றி உடைப்பது. வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமை பூசணிக்காய் சுற்றி உடைக்கலாம். இதனால் திருஷ்டிகள் விலகும்.
6. ஒரு கைப்பிடி கல் உப்பு, கடுகு, மிளகாய் ஆகியவற்றை கொண்டு வீட்டு உறுப்பினர்களை அமரச் செய்து அவர்களது தலையை சுற்றி வெளியில் எரித்து விட வேண்டும். உப்பு, கடுகு எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும். மிளகாய் அந்த எதிர்மறை ஆற்றலை அழிக்கும்.
7. பச்சைக் கற்பூரத்தை பற்ற வைத்து உடல் முழுவதும் சுற்றுவது ஆராவை தூய்மைப்படுத்தும். அதாவது கண் திருஷ்டிகள் விலகும்.
8. இது போன்ற முறைகளை நம்பாதவர்கள், விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். மூன்று அல்லது ஐந்து ஏழைகளுக்கு தயிர்சாதம் வழங்கலாம்.
கண் திருஷ்டி என்பது உண்மையா? என பலர் கேட்கலாம். இது பலரின் நம்பிக்கை. இது குறித்து அறிவியல் ரீதியாக ஆராயப்படா விட்டாலும், எதிர்மறை ஆற்றல்களின் தாக்கம் உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே மன அமைதிக்காக இந்த முறைகளை பின்பற்றலாம்.