மகாலட்சுமிக்கு உகந்த உப்பு தீபம்..!! வெள்ளிக்கிழமை நாட்களில் இப்படி ஏற்றுங்கள்..!!

Photo of author

By Janani

மகாலட்சுமிக்கு உகந்த உப்பு தீபம்..!! வெள்ளிக்கிழமை நாட்களில் இப்படி ஏற்றுங்கள்..!!

Janani

Updated on:

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதே போன்று உப்பு என்பதும் மகாலட்சுமிக்கு உகந்த ஒரு பொருள் என்பதையும் நாம் அறிந்திருப்போம். எனவே மகாலட்சுமிக்கு உகந்த இந்த வெள்ளிக்கிழமை நாட்களில் உப்பு தீபம் ஏற்றி வந்தோம் என்றால் வீட்டில் இருக்கும் பண கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி பண வரவு ஏற்படும். மேலும் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.

உப்பு என்பது வீட்டில் இருக்கும் தீய சக்திகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றை அழிக்கக்கூடிய ஒரு பொருள். உப்பினை வைத்து தீபம் ஏற்றும் பொழுது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் ஈர்க்கப்பட்டு வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல்களை பரவ செய்யும்.

இதனால்தான் பரிகாரம் செய்வதற்காகவும், வீட்டில் இருக்கும் தீய சக்திகளை விரட்டுவதற்காகவும், கண் திருஷ்டிகளை நீக்கவும் கல் உப்பினை பயன்படுத்துவார்கள். ஏனென்றால் கல் உப்பிற்கு அவ்வளவு சக்திகள் உண்டு. எனவே இந்தக் கல் உப்பினை வைத்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் விலகி குடும்பம் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.

இந்தக் கல் உப்பு தீபம் ஏற்றுவதற்கு முதலில் ஒரு சிறிய தட்டினை மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தட்டில் மஞ்சள் குங்குமம் வைத்து, சிறிதளவு மஞ்சள் கலந்த அட்சதையை (அரிசி) பரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் சற்று பெரிய மண் அகல் விளக்கினை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பினை போட்டுக்கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்ததாக இந்த உப்பின் மேல் சிறிது மஞ்சள் குங்குமத்தை தூவி விட்டு, அதன் மேல் ஒரு சிறிய மண் அகல் விளக்கினை வைத்து அதிலும் சிறிது மஞ்சள் கலந்த அட்சதையை போட்டுக் கொள்ள வேண்டும். இறுதியாக அந்த அட்சதை விளக்கின் மேல் இன்னொரு மண் அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இவ்வாறு தீபம் ஏற்றுவதன் மூலம் அந்த உப்பானது வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வுகளை இழுத்துக்கொண்டு நல்ல அதிர்வுகளையும், நேர்மறை ஆற்றல்களையும் வீடு முழுவதும் பரவச் செய்யும். மேலும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண பற்றாக்குறை நீங்கி நல்ல வருமானம் உண்டாகும்.

இந்த தீபத்திற்கு பயன்படுத்திய உப்பு மற்றும் அச்சதையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. மறுநாள் இந்த உப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். மேலும் இந்த தீபம் ஏற்றும் பொழுது அனைத்து விளக்குகளிலும் மஞ்சள், குங்குமம் வைத்து தான் தீபம் ஏற்ற வேண்டும்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் இந்த ஒரு உப்பு தீபத்தை மகாலட்சுமி தாயாருக்கு ஏற்றி பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும். இதனால் ஏற்படக்கூடிய நல்ல மாற்றங்களை உங்களால் கண்கூடாக மிக விரைவில் உணர முடியும்.