கடந்த 15 வருடங்களுக்கும் மேலாகவே தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு யாரும் தூய தமிழில் பெயர் வைப்பது இல்லை. தூய தமிழ் பெயர்களை பெற்றோர்களே கீழாக நினைக்கிறார்கள். நல்ல தமிழ் பெயர்களை விட்டுவிட்டு வட இந்திய பெயர்களை இணையத்தில் தேடிப்பிடித்து வாயில் நுழைய முடியாத படி ஒரு பெயரை வைக்கிறார்கள். இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தாய் மொழி தமிழ் மீது யாருக்கும் பற்றும், மரியாதையும் இல்லாமல் போய்விட்டதே இதற்கு முக்கிய காரணம்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மயிலை வேலு இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட போது ‘உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என மணப்பெண் மற்றும் மணமகனுக்கு கோரிக்க வைத்தார்’ இதைதொடர்ந்து ‘குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே’ என ஒருவர் டிவிட்டரில் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, தம்பியின் கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் – அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்’ என ஸ்டாலின் டிவிட்டரிலேயே பதில் கூறியிருக்கிறார். இதையடுத்து தமிழ் மீது ஆர்வம் கொண்ட பலரும் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி வருகின்றனர்.