நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்டதுதான் தேமுதிக. அவர் இருந்தவரை அந்த கட்சிக்கு ஒரு மவுசு இருந்தது. ஆனால், அவர் எப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டாரே அதிலிருந்தே கட்சிக்கு இறங்கு முகம் துவங்கியது. விஜயகாந்த் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். அதுவும் பாமக வெற்றி பெறும் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டினார்.
அதன்பின் திமுகவை தோற்கடிப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால், சட்டசபையில் அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நக்கை துறுத்தி கோபம் காட்டி சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் அதிமுக, திமுக இரண்டையுமே கடுமையாக விமர்சித்து வந்தார். உடல்நிலை பாதிப்பால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த விஜயகாந்த் 2023ம் வருடம் டிசம்பர் மாதம் மரணமடைந்தார்.
அவர் மறைந்து ஒன்றரை வருடம் கழித்து தேமுதிக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டம் துவங்குவதற்கு முன்பே தேமுதிக தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதன்படி தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், பிரேமலதாவின் சகோதரரும், விஜயகாந்தின் மைத்துனருமான சதீஷ் தேமுதிக பொருளாலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைமையின் இந்த அறிவிப்பு தேமுதிகவினருக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
அதோடு, சென்னை வடபழனி 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். வக்பு சட்டத்தால் இஸ்லாமியர்களின் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். விஜயகாந்துக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.