ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அவ்வப்போது சலுகைகள் வழங்கி வரும் நிலையில் ஒரு சில ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. சென்னையில் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் கருவி கொண்டுவரப்பட்டது.
தற்போதும் முறைகேடுகள் குறையாமல் இருப்பதினால் கைரேகை பதிவு செய்யும் கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. முதல் முறையாக சென்னையில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் வழங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் இல்லை எனவும் பல வகையில் முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் அடிப்படையில் பி ஓ எஸ் கருவியுடன் மின்னணு தராசு இணைக்கப்பட்டு சில ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு எடை தராசானது வைபை ப்ளூடூத் வசதியுடன் பி ஓ எஸ் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஊழியர் தராசில் வைக்கக்கூடிய பொருளின் எடை கருவியில் பதிவாகும் அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலமாக நுகர்வோருக்கு வழங்கக்கூடிய பொருட்களின் அளவு தராசில் காட்டப்படும் பொருட்களின் அளவும் சரியாக இருந்தால் மட்டுமே பி ஓ எஸ் கருவி அடுத்த கட்ட செயல்முறைக்கு செல்லும்.
இந்த நடைமுறையின் மூலமாக சரியான எடைக்குப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் எடை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வைக்க முடியாது என்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை அடிப்படையில் சென்னையில் ஒரு சில கடைகளில் தற்போது இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.