எம்.ஜி.ஆர். முதல் ஜெயலலிதா வரை அ.தி.மு.க வில் பிரபலமானவராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கிய செங்கோட்டையன், தற்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும், அந்த எண்ணத்தில் தான் அவ்வாறு கூறினேன், ஆனால் அதற்காக கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை. முறைப்படி என்னுடைய கருத்துக்கு மாற்று கருத்து இருந்தால், அவர்கள் என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்யவில்லை, இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும், பொறுப்புகளில் இருந்து நீக்கியது வேதனை இல்லை மகிழ்ச்சியே என்றும் கூறி இருந்தார்.
செங்கோட்டையனுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ.பன்னிர்செல்வம் போன்ற அ.தி.மு.க-வின் முன்னாள் தலைவர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் பிற கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களும், அவருக்கு ஆதரவு அளித்த வண்ணம் உள்ளனர். இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்வோம் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய 10 நாள் கெடு தொடரும் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சில மூத்த தலைவர்கள் செங்கோட்டையனின் பதவி பறிப்பு கட்சியின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் முடிவு என்றும் கூறியுள்ளனர். அ.தி.மு.க-வில் நிலவும் பதவி பறிப்பு, கட்சியின் நிலைத்தன்மையை வெளிபடுத்துவதாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால் மக்களுக்கு அ.தி.மு.க மேல் இருக்கும் நம்பிக்கையும், தேர்தல் நேரத்தில் எதிர்மறையான தாக்கத்தையும் உண்டாக்கும் என்றும் விமர்சித்துள்ளனர்.