TVK: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கலே உள்ள நிலையில் த.வெ.க தலைவர் விஜய் செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கு மூன்று முறை அனுமதி கோரியும் காவல்துறையினர் தர மறுத்ததால் விஜய் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியானது.
நீண்ட நாட்களாகவே த.வெ.க தலைவர் விஜய் மக்களை நேரில் சந்திக்காமல் சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே அவருடைய கருத்தையும், அறிவிப்பையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். இதனால் அவரை பலரும் கிண்டலடித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அண்மையில் இரண்டு மாபெரும் மாநாடுகளை அவர் நடத்தினார்.
இந்த பிரச்சாரத்தில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை சனிக்கிழமைகளில் மட்டுமே நடத்துவதாக திட்டமிட்டு இருக்கிறார். இவரின் இந்த சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் ஏன் என்ற கேள்வி அரசியல் களத்திலும், த.வெ.க தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
இதனை பலரும் விமர்சித்து வரும் நிலையில் பா.ஜ.க-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அரசு வேலை என்பது மக்களுக்காக உழைப்பது ஆகும். அது 24 மணி நேரமும் செய்யக்கூடியது. சனிக்கிழமை மட்டும் தான் பிரச்சாரத்திற்கு வருவேன் மக்களை சந்திப்பேன் என்பது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நல்லதல்ல, தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் தான் போட்டி என்றால் அந்த வேகத்தை களத்தில் காட்ட வேண்டும் என்று தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.
சிலர் இதனை, பிரச்சாரத்தை முடித்துவிட்டு மீதி இருக்கும் ஆறு நாட்கள் த.வெ.க தலைவர் விஜய்யை விமர்சிக்க அவர் அளித்திருக்கும் விடுமுறை என்றும் கேலி செய்து வருகின்றனர்.