அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மற்றும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை குறித்தும், இ.பி.எஸ் தலைமையிலான தேர்தல் தோல்விகள் குறித்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அ.தி.மு.க எப்போதும் வெற்றிப் பாதையில் நடந்தது.
சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்திலும் மக்கள் நம்பிக்கையோடு அ.தி.மு.க-க்கு வாக்களித்தனர். ஆனால் இ.பி.எஸ் கையில் அ.தி.மு.க சென்றதிலிருந்தே, தேர்தலில் தோல்விகள் தொடர்கின்றன. இடைத்தேர்தல், உள்ளாட்சி, நாடாளுமன்றம் எதிலும் வெற்றியை பார்க்க முடியவில்லை.
இதுவே அவரது தலைமையின் திறமையைக் காட்டுகிறது” என தினகரன் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் அ.தி.மு.க மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது என்றும் கூறியுள்ளார். இ.பி.எஸ் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக, அதிகாரப் போட்டியில் மூழ்கியுள்ளார் எனவும், இ.பி.எஸ்-யின் தவறான முடிவுகள், தலைமை வெறியே இதற்கு காரணம் என்று அவர் சாடியுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் அ.தி.மு.க-வின் நிலைமை இன்னும் மோசமடையும் என்றும், இ.பி.எஸ் தன்னை திருத்தி கொள்ளவில்லையெனில் மக்கள் மாற்று வழியை தேடுவார்கள், இந்நிலை நீடித்தால் அ.தி.மு.க-வின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்” என்று தினகரன் எச்சரித்தார். அ.தி.மு.க-வில் தலைமைப் பிரச்சனை மீண்டும் தீவிரமடையும் நிலையில், தினகரனின் இந்த கருத்துகள் அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.