தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் முன்னணி கட்சிகளுக்கு மிகப்பெரும் போட்டியாக வளர்ந்து வருகிறார். இது அதிமுக-விற்கும், திமுக-விற்கும் பாதகமாக அமைந்துள்ளது. விஜய் நடத்திய இரண்டு மாநாட்டிலும் யாரும் எதிர்பார்த்திராத அளவு கூட்டம் கூடியது. இது ஆளும் கட்சியான திமுக-வையும் எதிர்கட்சியான அதிமுக-வையும் கதிகலங்க வைத்தது.
இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சியில் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கு 3 முறை அனுமதி கோரியும் காவல் துறையினர் அனுமதி தராததால், விஜய் நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையெல்லாம் தாண்டி இன்று திருச்சியில் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ஆதரவாளர்களும், ரசிகர்களும் திரண்டனர்.
இந்த கூட்டமே அவரின் வெற்றிக்கான முதற்படி என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அடுத்ததாக விஜய் செப்டம்பர்-20 ஆம் தேதி நாகையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. திருச்சி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கபட்ட போதே விஜய் அவர்கள் திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார்.
வாக்குகள் தவெக பக்கம் வந்துவிடுமோ என்ற பயத்தினால் தான் ஆளுங்கட்சி இவ்வாறான மறைமுக வேலைகளை செய்து வருவதாகவும், யாராலும் தவெக-வை வீழ்த்த முடியாது என்றும் கூறினார். தற்போது அதற்கேற்றார் போல் நாகையில் நடைபெறவிருக்கும் பிரச்சாரத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் தவெக-வின் வளர்ச்சியை சிதைக்க திமுக இதனை திட்டமிட்டு செய்து வருகின்றது என்று, தவெக தரப்பினர் கூறி வருகின்றனர்.
அரசாங்கத்தின் அனுமதி மறுப்பின் மூலம் திமுக, தவெக-வை பார்த்து பயப்படுகிறது என்ற உணர்வை தூண்டியுள்ளது. சாதாரண பிரச்சாரத்தை விட “அனுமதி மறுப்பு” என்பதே அதிகளவில் பேசப்படும் என்பதால், இந்த சம்பவத்தினால் விஜய் இன்னும் வளர்ந்து வருவார் என்ற கருத்தும் நிலவுகிறது. எதிர்கட்சிகளுக்கு கூட இல்லாத நிபந்தனைகளும், அனுமதி மறுப்பும் தவெக-விற்கு மட்டும் ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.