T.V.K: தமிழக அரசியலில் தற்போது புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது.
திமுக -அதிமுக என்ற மிகப்பெரும் திராவிட கட்சிகள் நீண்ட காலமாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், தற்போது மூன்றாவது வலுவான சக்தியாக நடிகர்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் யார் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே அதிமுக 5 அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில் அவர்கள் தவெக-வுடன் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணி தொடர்பாக டி.டி.வி தினகரன், செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் , ஆகியோரிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் இப்பொழுது அந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி.டி.வி தினகரனிடம் இது குறித்து கேட்டபோது கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை ஆனால் அதற்கான ஆலோசனை நடைபெற்று கொண்டிருக்கிறது விரைவில் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று கூறி இருந்தார். இரண்டாவதாக ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது, விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக கூறினார்.
செங்கோட்டையன் எடப்பாடிக்கு விதித்திருந்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், ஒருங்கிணைப்பு நடவடிக்கை செயல்படுத்தப்படவில்லை எனில், ஒத்த கருத்துள்ள அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் என்று கூறியிருந்தார். அதனால் இவர்கள் மூவரும் விஜய்யுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் அது, ஆளும் கட்சியான திமுக-விற்கும், எதிர்கட்சியான அதிமுக-விற்கும் சவாலாக இருக்கும் எனவும், அதேசமயம் தவெக-விற்கு சாதகமாகவும் அமையும் என்ற கருத்து நிலவுகிறது. இந்த கூட்டணி வரவிருக்கும் தேர்தலில், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.