A.D.M.K: அரசியல் களத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வு செங்கோட்டையன் பதவி நீக்கம் செய்யபட்டதே ஆகும். அதிமுக-வின் மூத்த தலைவரான செங்கோட்டையன் செப்டம்பர் 5 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அதற்காக கட்சியின் தலைமை எடப்பாடிக்கு 10 நாட்கள் கெடுவும் விதித்திருந்தார்.
10 நாட்களுக்குள் இதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால் என்னைப்போன்ற ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்று கூறியிருந்தார். அவர் கெடு விதித்த அடுத்த நாளே தலைமைக்கு எதிராக கேள்வி எழுப்பியதாக கூறி, இ.பி.எஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார்.
இதனை தொடர்ந்து செங்கோட்டையன் அவர்கள் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கட்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார் என்று கூறப்படுகிறது. செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இன்று செங்கோட்டையன் அவரின் இறுதி முடிவை கூறுவார் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர் இது வரை மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு சிலர் அவர் மௌனம் காப்பதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ஜ.க மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கான அறிகுறியாகும் என்றும் சொல்கின்றனர். இந்த பேச்சு வார்த்தையின் மூலம் அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா? இல்லை எடப்பாடி பழனிச்சாமி அவருடைய முடிவில் உறுதியாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.