A.D.M.K D.M.K: சேலம் எப்போதுமே அதிமுக-வின் கோட்டையாக கருதப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், அதிமுக வாக்காளர்கள் இங்க அதிகம் இருக்கின்றனர். ஆனால், சமீபத்தில் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள், தலைமை மாற்றம், செங்கோட்டையன், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் ஆகியோரின் பிரிவுகள், அதிமுக வலிமையை குறைத்துவிட்டன.
இந்த சூழ்நிலையில், திமுக மிகவும் நுணுக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலத்திற்கு வருகை தருகிறார். இது ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல; இது தி.மு.க-வின் தேர்தல் யுக்தியாக கருதப்படுகிறது. இளைஞர்களிடையே தனக்கு அதிக வரவேற்பு இருப்பதாக திமுக நம்புகிறது.
இதனால் இளைஞர்களிடையே தன்னுடைய செல்வாக்கை மேலும் விரிவாக்கும் முயற்சியோடு, அதிமுக-வின் பாரம்பரிய கோட்டையை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. திமுக-வின் மூத்த தலைவர்கள், “அதிமுக தற்போது பலவீனமடைந்துள்ளது. இந்த சூழலில் அதிமுக-வின் கோட்டையாக கருதப்படும் சேலம் போன்ற பகுதிகளில் திமுக வலிமை பெற வாய்ப்புள்ளது” என நம்புகின்றனர்.
அதேவேளை, எடப்பாடி அணியினர் சேலம் எங்கள் கோட்டை, எங்கள் வாக்காளர்கள் அசைய மாட்டார்கள் என்று உறுதியாக கூறி வருகின்றனர். சேலத்தில் திமுக வலுவடையும் பட்சத்தில், அது பெரிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். அதிமுக-வின் அடிப்படை வாக்காளர்கள் குறைந்தால், அது வரவிருக்கும் தேர்தலில் அதிமுக-வுக்கு பெரிய சவாலை உருவாக்கும்.
இதை உணர்ந்த திமுக, சேலத்தில் தன் நிலையை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்படுகிறது. உதயநிதியின் இந்த வருகை அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கும் உதயநிதி, அதிமுக-வின் பாரம்பரிய ஆதரவாளர்களிடமும் தாக்கம் ஏற்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உதயநிதியின் வருகையால் திமுகவு-க்கு சேலத்தில் புதிய நிலை கிடைக்குமா? அல்லது அதிமுக தனது கோட்டையை தக்க வைத்துக் கொள்கிறதா? என்பது தான் அடுத்த கட்ட அரசியல் கேள்வி.