D.M.K B.J.P: பல வருடங்களாகவே பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. என்னதான் மத்திய அரசில் வலுவாக இருந்தாலும், தமிழகத்தில் நிலை பெறுவது பாஜக-விற்கு போராட்டமாகவே இருந்து வருகிறது. தனியாக தேர்தலை சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த பாஜக, கூட்டணி வைத்தாவது திமுக-வை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்று அதிமுக உடனான கூட்டணியில் திட்டம் தீட்டி வருகிறது.
இந்நிலையில் மதுரை அண்ணா நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜி.எஸ்.டி குறைப்பு மத்திய அரசு மக்களுக்கு வழங்கிய தீபாவளி பரிசு என்றும், இதன் மூலம் பொதுமக்கள், தொழில் அதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் லாபம் அடைந்துள்ளனர்.
ஆனால், தமிழக முதலமைச்சர் இதனை பாராட்ட மறுக்கிறார். வேண்டாத பொண்டாட்டி கைப்பட்டால் குத்தம், கால்ப்பட்டால் குத்தம் என்ற பழமொழியை போல் மத்திய அரசு எதை செய்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கும் பழக்கம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்டு என்றும், மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த தீர்மானமாக இருந்தாலும் அதனை, பாராட்டுவதற்கு முதல்வர் தயக்கம் காட்டாமல் இருக்க வேண்டும் என்றும் விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர் அதிமுக-வில் ஜனநாயகம் உள்ளதால் அதிமுக தலைவர்கள் அமித்ஷா-வை சந்தித்து வருகிறார்கள். திமுக-வில் ஜனநாயகம் இல்லாததால் திமுக தலைவர்கள் அமித்ஷா-வை சந்திக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அதே போல் அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்பதே என்னுடைய கருத்து என்றும் கூறினார்.