ADMK: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திடீரென்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்யை தவிர வேறு யாரை நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று கூறியிருந்தார். இது குறித்து பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர் இன்று டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்று முதல் முதலில் பரிந்துரைத்தவரே டிடிவி தினகரன் தான். அப்போது அவர் முழுமையாக ஆதரவு அளித்தார். பின்னர் அரசியல் காரணங்களுக்காக திசை மாறிவிட்டார் என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக திகழ்கிறது என்றும், மக்களிடையே இபிஎஸ்க்கு பெரும் வரவேற்பு உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். ஏற்கனவே நயினார் நாகேந்திரன் இபிஎஸ்க்கு சாதகமாக செயல்படுகிறார் என்று டிடிவி தினகரன் கூறி வந்த நிலையில் இவரின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதொடு, டிடிவி தினகரனின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுகவில் உட்கட்சி சிக்கல்கள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.