AMMK BJP: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடியாரால் அதிமுகவில் இருந்து நீக்கபட்டதிலிருந்தே அவரை கடுமையாக சாடி வருகிறார். இந்நிலையில் டெல்லி சென்ற இபிஎஸ் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு சாத்தியமில்லை என்று அமித்ஷாவிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் எனக்கும், இபிஎஸ்க்கும் இடையே தனிப்பட்ட முறையில் எந்தவித விரோதமும் இல்லை என்றும், வரவிருக்கும் டிசம்பர் மாதத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், அண்ணாமலையும் நானும் டெல்லி செல்வதாக இருந்தது. தினமும் நாங்கள் உரையாடுகிறோம். அண்ணாமலையின் குணமும் என் குணமும் பல இடங்களில் ஒத்துப்போகின்றன என்று கூறியுள்ளார். அண்ணாமலையுடன் தொடர்பில் இருப்பதாக அவர் கூறியது, பாஜக உடனான கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும், விரைவில் பாஜக, அமமுக கூட்டணி அமையும் என்பதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.
பாஜக தமிழகத்தில் வலுவான அடித்தளத்தை தேடி கொண்டிருப்பதாலும், தினகரனுக்கு தென் மாவட்டங்களில் ஆதரவு அதிகம் இருப்பதாலும் இந்த கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். அண்ணாமலை-தினகரன் இடையிலான தொடர்பு, அதற்கான சிக்னலாக கருதப்படுகிறது. அதே சமயம், ஓபிஎஸ் அணியுடனான ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன.
ஓபிஎஸ்-செங்கோட்டையன் சந்திப்புக்குப் பிறகு, தினகரனும் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு பக்கம், தினகரன் தனித்து புதிய கூட்டணியை உருவாக்குவாரா என்ற கேள்வியும் எழுகிறது. இதனால், டிசம்பரில் தினகரன் அறிவிக்கவிருக்கும் செய்தி தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கும் என்பது தெளிவாகிறது.