TVK DMK: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அடுத்த தேர்தலிலும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் திமுகவிற்கு தொடர்ந்து பல்வேறு சவால்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை சமாளிப்பதே பெரும் பாடாக உள்ளதென்று திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன.
திமுக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளான விசிக, காங்கிரஸ் தங்களுக்கு கூட்டணியில் உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றும், திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்போம் என்றும் கூறி வந்தனர். இது திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது மாநாட்டில் கூட்டணி அமைக்கப்படும் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்றும், கூறியிருந்தார்.
அப்போதிலிருந்து இப்போது வரை தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து திமுக, பாஜகவை கடுமையாக சாடி வந்த விஜய் காங்கிரஸ்யை பற்றி எதுவும் பேசாமல் இருந்தது அவர் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்று கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ராகுல் காந்தியிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவிற்கு காங்கிரசின் பலம் மிகவும் முக்கியமென்பதாலும், தனித்து நின்றால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதாலும் காங்கிரசின் கோரிக்கையை ஏற்குமா ஏற்காதா என்பது கேள்வியாக உள்ளது. இந்த வாய்ப்பை தவறவிட்டால் இது திமுகவிற்கும் சவாலாக மாற வாய்ப்பிருக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.