AMMK NDA: டிடிவி தினகரனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே சச்சரவு நிலவி வருவது ஊடகங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தே.ஜ.கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் இபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்யை தவிர வேறு யாரை நிறுத்தினாலும், தே.ஜ.கூட்டணியில் இணைவோம் என்றும் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த இபிஎஸ், என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்காதவர்களை கட்சியில் சேர்க்க முடியாது என்றும், வேண்டுமென்றால் கூட்டணியில் சேர்த்து கொள்ளுங்கள் என்றும் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன் எனக்கும், அண்ணாமலைக்கும் நல்ல உறவு இருக்கிறது என்று கூறியிருந்தார். இதையடுத்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு திடீரென்று டிடிவி தினகரனை சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சந்திப்பானது சுமார் ஒன்றரை மணி நேரம் நடைப்பெற்றுள்ளது என்றும், டிடிவி தினகரனிடம் பேசிய அண்ணாமலை மீண்டும் தே.ஜ.கூட்டணியில் இணையுமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
முன்னதாக, தினகரன் தலைமையிலான அமமுக தனித்துப் போட்டியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பாஜக தன்னுடைய ஆதரவை பெருக்க விரும்புவதால், இது போன்ற பிரிந்த கூட்டணி கட்சிகளுடன் தீவிரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது என்றும் இதற்கு அண்ணாமலையை பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. இது 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.