ADMK: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்திற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையம் வழியாக இன்று நீலகிரிக்கு சென்ற இபிஎஸ்-க்கு கோபிசெட்டிபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிகாலம் முதல் இன்று வரை கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையனின் முகமாக கருதப்பட்டு வருகிறது. கோபி தொகுதியில் 1980 முதல் 2016 வரை 7 முறை செங்கோட்டையன் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார்.
அப்போதிலிருந்து இப்போது வரை அந்த பகுதியில் இவர் செல்வாக்கு மிக்கவராகவும், பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றும் நல்ல தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் வனத்துறை, வேளாண்மை துறை, சுற்றுசுழல் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வி துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். ஒருங்கிணைக்க வேண்டுமென்று 10 நாட்கள் கெடு விதித்திருந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார் இபிஎஸ்.
இதனை தொடர்ந்து செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பலரும் அவரை சந்தித்து வந்தனர். நேற்று முன்தினம் கூட 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் செங்கோட்டையனின் வீட்டிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதால் அவரின் தொகுதியில் அதிமுக தோல்வியை தழுவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதியில் இபிஎஸ்க்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு வரவேற்பு அளிக்கப்பட்டது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் செங்கோட்டையனின் குரலுக்கு அப்பகுதி மக்கள் செவிசாய்க்கவில்லை என்பதையும், அங்கு இன்னும் அதிமுக ராஜ்ஜியமே நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கும் எடுத்துக்காட்டாக இது உள்ளதென இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.