DMK PMK: பாமகவில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே சமீப காலமாகவே தலைமை போட்டி நிலவி வருகிறது. அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டிற்கு அவர் பதிலளிக்காததால் அவரை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார் டாக்டர் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும், சின்னத்தின் உரிமையாளர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.
இப்போது பாமக நிர்வாகிகள் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகின்றனர். அதிமுக அதன் உட்கட்சி பூசலை தீர்க்க டெல்லி சென்று மத்திய அமைச்சர்களின் உதவியை நாடியதை போலவே, பாமகவும் நரேந்திர மோடியிடம் உதவி கேட்க உள்ளதாக தகவல் வெளியானது. இவர்களை இணைக்க பாமகவின் உயர் மட்ட நிர்வாகிகள் சிலர் அன்புமணிக்கும், ராமதாசுக்கும் தெரியாமல் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சிலர் அதிமுகவிடம் உதவி கேட்டதாகவும் சொல்கின்றனர். இந்த நிலையை அதிமுக பயன்படுத்தி கொண்டு பாமகவை தம் பக்கம் இணைக்க முயல்வதாக சொல்லப்படுகிறது. ராமதாசிடம் திமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கு ராமதாஸ் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஒருமுறை ராமதாஸ், தனது உயர்மட்ட பொதுக்குழு கூட்டத்தில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியில் தான் பாமக இணையும் என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் திமுக இந்த நிபந்தனைக்கு ஒப்புகொண்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால் திமுகவை கடுமையாக வஞ்சித்து வரும் அன்புமணி இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பது தற்போதைய கேள்விக்குறியாக உள்ளது. அன்புமணியின் ஆதரவு அதிமுக பக்கம் தான் என்று அன்புமணியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.