
TVK: தவெக தலைவரும், நடிகருமான விஜய் 2016-2017ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்திருந்தார். அப்போது அந்த ஆண்டிற்கான வருமானமாக 36 கோடி ரூபாய் பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர் நடித்த புலி படத்திற்கான 15 கோடி ரூபாயை வருமானத்தில் மறைத்ததற்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜய் தரப்பு, அபராதம் விதித்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டது. இதற்கு எதிர் வாதமாக வருமான வரித்துறை தரப்பிலிருந்து, வருமானவரி சட்டப்படி நடிகர் விஜய்க்கு விதித்த அபராதம் சரிதான் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இதே போன்று வேறொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்புக்கு உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பணம், காசெல்லாம் முக்கியமில்லை; அதை வைத்து என்ன செய்ய போகிறோம் என்று விஜய் தனது பிரச்சாரத்தில், உணர்ச்சி போங்க பேசியதையெல்லாம் வைத்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.