BJP: இன்னும் சில மாதங்களில் 2026 க்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில் புதிய உதயமாக நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறது. இந்த சூழ்நிலையில் அதிமுகவிலும், பாஜகவிலும் உட்கட்சி பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை, NDA கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன், ஓபிஎஸ், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று கூறிய செங்கோட்டையனை இபிஎஸ் பதவிகளிலிருந்து நீக்கியது போன்ற பல்வேறு சிக்கல்கள் முளைத்து வருகின்றன. இந்நிலையில் இவர்கள் அனைவரும் ஒரு கூட்டணியாக செயல்படுவார்கள் என்று சொல்லப்பட்டது. அதே போல் தான் அண்ணாமலை, டிடிவி தினகரனின் சந்திப்பு இருந்தது.
ஆனால் பாஜக மேலிட உத்தரவின் காரணமாக தான் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்ததாகவும் தமிழக பாஜக கூறியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாஜக தலைமை, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜக 5 குழுக்களை நியமித்திருக்கிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக அண்ணாமலையை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்தே பாஜகவிலிருந்து சற்று ஒதுங்கியிருந்த அண்ணாமலை தனிக்கட்சி துவங்க போகிறார் என்ற தகவலும் பரவி வந்தது. ஆனால் தற்போது வெளியான செய்தி, அண்ணாமலை மீண்டும் பாஜகவில் இணைந்து தனது பழைய அங்கீகாரத்தை மீட்டெடுக்க முயல்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் கட்சிக்குள்ளிருந்தே நயினார்க்கு எதிரான செயல்பாடுகளை செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.