ADMK: அதிமுகவில் எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் தொடர் யுத்தம் நடைபெறுவது தற்போது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. இபிஎஸ் செங்கோட்டையனை கட்சி பதவியிலிருந்து நீக்கிய போதும் கூட அவருடைய 10 நாள் கெடு தொடரும் என்று கூறியிருந்தார். 10 நாட்களுக்கு பிறகும் செங்கோட்டையன் எந்த கருத்தையும் கூறாமல் இருந்தார்.
அவரின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். என்ன ஆனாலும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று இபிஎஸ் திட்ட வட்டமாக இருக்கிறார். அண்மையில் செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் இபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிமுக கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியிடம் செங்கோட்டையனுக்கு அதிமுகவில் எதிர்காலம் இல்லையா? எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற முன்னாள் தலைவர்களே கட்சியிலிருந்து நீக்கியவர்களை மன்னித்து மீண்டும் கட்சியில் இணைத்துள்ளனர். ஆனால் இபிஎஸ் மட்டும் ஏன் பிடிவாதமாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கே.பி.முனுசாமி இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிலும் கூட பிரிந்தவர்களை மீண்டும் இணைத்துள்ளோம். அவர்கள் அதிமுக தலைமையிடம் மன்னிப்பு கேட்டு இணைந்தனர். ஆனால் இந்த விவகாரம் சற்று மோசமானது. இப்போது கூட செங்கோட்டையன் மன்னிப்பு கடிதமோ, அல்லது மீண்டும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை பற்றி பேசாமல் இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது சாத்தியம் என்று கூறினார்.
அதிமுகவில் செங்கோட்டையனுக்கு எதிர்காலம் இருக்கிறதா இல்லையா என்பது அவரின் முடிவை பொறுத்து தான் உள்ளது என்றும் கூறினார். கட்சியின் மூத்த தலைவராக அறியப்பட்டு வந்தவரிடம் மன்னிப்பு கடிதம் கேட்டது செங்கோட்டையனின் ஆதரவாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.