ADMK DMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஆளுங்கட்சியான திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும், எதிர்கட்சியான அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக பல அணிகளாக பிரிந்திருப்பதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இதற்கு எதிர் வாதமாக அதிமுக ஒரு அணியாக தான் இருக்கிறது என்று இபிஎஸ் கூறியிருந்தார். ஆனால் தற்போது திமுகவிற்குள்ளும் கூட்டணி பிரச்சனை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தனது தேர்தல் பரப்புரையில் பேசிய இபிஎஸ், திமுகவில் பிளவு ஏற்பட தொடங்கிவிட்டது என்றும், அதிமுக கூட்டணியை விமர்சித்து வரும் திமுகவிடம், பாஜக உடன் திமுக கூட்டணி வைக்கலாம் ஆனால் அதிமுக வைக்ககூடாதா என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் கூட்டணி ஆட்சி கேட்கிறார்கள், ஆனால் செல்வபெருந்தகை மறுக்கிறார். செல்வபெருந்தகை காங்கிரஸ் கட்சியை வளர்க்க விரும்பவில்லை என்றும் அவர் எந்த கட்சிக்கு சென்றாலும் அந்த கட்சியின் கொள்கையை கடைப்பிடிப்பார் என்றும் கூறியிருந்தார். உண்மையான காங்கிரஸ் தொண்டனாக இருந்திருந்தால், ஆட்சியில் பங்கு கேட்காதீர்கள் என்று சொல்லியிருக்க மாட்டார் மாறாக அதற்கு ஆதரவு தெரிவித்திருப்பார்.
மேலும் கே.எஸ் அழகிரி போன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆட்சியில் பங்கு கேட்க தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக திமுக கூட்டணிக்கு உள்ளேயும் பிளவு ஏற்பட தொடங்கி விட்டது என்று கூறியிருந்தார். அதிமுகவில் ஏற்பட்ட பிளவை திமுகவை சேர்ந்த பலரும் விமர்சித்து வந்ததற்கு பதிலடியாக இந்த கருத்தை கூறியுள்ளார் இபிஎஸ்.